முதல்-அமைச்சர் குறித்து அவதூறு பேச்சு: எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்-போலீஸ் சூப்பிரண்டிடம், புகழேந்தி புகார் மனு

முதல்-அமைச்சர் குறித்து அவதூறாக பேசிய, எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம், புகழேந்தி புகார் மனு கொடுத்தார்.

Update: 2022-06-14 22:04 GMT

சேலம்:

அ.தி.மு.க. முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி, நேற்று சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவிடம் புகார் மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

சேலம் மாவட்ட நிலவாரப்பட்டியில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை ஒரு முதல்-அமைச்சர் ஆட்சி செய்யவில்லை. மேலும் 3 முதல்-அமைச்சர்கள் ஆட்சி செய்கிறார்கள். அதாவது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின், மருமகன் சபரீசன், மனைவி துர்கா ஸ்டாலின் ஆகிய 3 பேரும் தான் அவர்கள். 4 முதல்-அமைச்சர்கள் ஆட்சி செய்வதால் எந்த திட்டமும் நிறைவேற்றப்படுவது இல்லை என பேசி உள்ளார். அவரது பேச்சு ஜனநாயகத்துக்கு விரோதமானது. இந்த பேச்சு தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளுக்கு எதிரானது. மக்களை திசை திருப்பி கிளர்ச்சியை உண்டாக்கும் விதத்தில் உள்நோக்கத்தோடு பேசிய எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்து, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், பாரதீய ஜனதா கட்சியில் இருந்து வரும் உத்தரவுப்படி அ.தி.மு.க.வில் பொதுச்செயலாளர் தேர்வு நடைபெறும். மேலும் விரைவில் நடைபெற உள்ள அ.தி.மு.க. பொதுக்குழு, ரவுடிகளை வைத்து நடைபெறும். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமரை உட்கார வைத்து கேள்வி கேட்கிறார். சரியானதை சரி என்றும், தவறு என்பதை தவறு என்றும் கூறுகிறார் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்