போக்குவரத்து நெரிசல்
ஈரோடு கொல்லம்பாளையம் ரெயில்வே நுழைவு பாலத்தில் பராமரிப்பு பணிகள் நடந்து வருவதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. காளைமாட்டுசிலை பகுதியில் இருந்து கொல்லம்பாளையம் செல்லும் கார்கள் உயரம் குறைவான பாலம் வழியாக செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதன்காரணமாக கொல்லம்பாளையத்தில் இருந்து நுழைவு பாலம் வரும் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே இதை தவிர்க்க காளைமாட்டுசிலை பகுதியில் இருந்து உயரம் குறைவான பாலம் வழியாக செல்வதற்கு இரு சக்கர வாகனங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்க வேண்டும்.
பொதுமக்கள், ஈரோடு.
ஆகாயத்தாமரைகள் அகற்றப்படுமா?
ஈரோடு வில்லரசம்பட்டி அருகே உள்ள கருவில்பாளையம் வலசில் குளம் உள்ளது. ஈரோட்டில் பெய்த மழை காரணமாக தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. ஆனால் இந்த குளத்தை ஆகாயத்தாமரைகள் ஆக்கிரமித்து உள்ளது. இதனால் தண்ணீர் பச்சை நிறத்தில் காட்சி அளிக்கிறது. எனவே சம்பந்தப்பட்டத்துறை அதிகாரிகள் இந்த ஆகாயத்தாமரைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொன்.நாராயணன், ஈரோடு
ஆபத்தான மின்கம்பம்
பவானி காலிங்கராயன்பாளையத்தை அடுத்த மேட்டுநாசுவம்பாளையம் ஊராட்சி அலுவலகம் எதிரில் உள்ள பாரதி நகருக்கு நுழையும் பகுதியில் மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பத்தின் அடிப்பகுதியில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து அதில் உள்ள கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் அந்த மின்கம்பம் எப்போது வேண்டு்மானாலும் உடைந்து கீழே விழும் நிலையில் உள்ளது. மின்கம்பம் விழுந்து ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன் அதை மாற்றி அமைக்க மின்சார வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், மேட்டுநாசுவம்பாளையம்
தேங்கும் கழிவுநீர்
ஈரோடு வள்ளியம்மை முதலாவது வீதியில் உள்ள சாக்கடை வடிகாலில் அடைப்பு ஏற்பட்டு்ள்ளது. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவ வாய்ப்பு உள்ளது. உடனே சாக்கடை அடைப்பை நீக்கி கழிவுநீர் செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், ஈரோடு.