ஆபத்தான மின்கம்பம்
கொடுமுடி அருகே சென்னசமுத்திரம் பேரூராட்சிக்கு உள்பட்ட 1-வது வார்டு கொல்லம்புதுப்பாளையம் பகுதியில் ஆபத்தான நிலையில் மின்கம்பம் உள்ளது. இதன் அடிப்பகுதியில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிந்்த நிலையில் உள்ளது. இதனால் மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் சாய்ந்து விழுவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆபத்தான நிலையில் காணப்படும் மின்கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும்.
கொல்லம்புதுப்பாளையம், பொதுமக்கள்.
ஒளிராத மின்விளக்குகள்
கோபி பஸ் நிலையத்தில் பயணிகள் வசதிக்காக உயர்கோபுர மின்விளக்கு வசதி செய்யப்பட்டுள்ளது. 6 விளக்குகள் உள்ள இந்த உயர் கோபுர கம்பத்தில் ஒரு விளக்கு மட்டுமே ஒளிர்கிறது. இதேபோல் பஸ்நிலையம் அருகே உள்ள ஆட்டோ நிறுத்தம் பகுதியில் ஒரு உயர்கோபுர மின்கம்பம் உள்ளது. அதில் 9 விளக்குகள் உள்ளன. ஆனால் 2 விளக்குகள்தான் ஒளிர்கின்றன. இதனால் இரவு நேரத்தில் பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. எனவே உடனே 2 உயர்கோபுர கம்பங்களிலும் உள்ள அனைத்து விளக்குகளையும் ஒளிரச்செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாதன், கோபி.
குண்டும், குழியுமான ரோடு
ஈரோடு முனிசிபல் காலனி கொங்குநகர் முதல் வீதியில் ரோடுகள் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் தட்டு தடுமாறி செல்கிறார்கள். இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் ரோட்டில் குழி இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். இதனால் பேராபத்து ஏற்படுவதற்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமான ரோட்டை சரிசெய்வார்களா?
முனிசிபல் காலனி, பொதுமக்கள்.
வெளிச்சம் இல்லை
ஈரோடு சோலாரில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து தெற்கு நோக்கி ஈரோடு-கரூர் ரோட்டில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு மின்விளக்கு வசதிகள் இல்லை. இதனால் இரவில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு பெரும் சிரமமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக அந்த பகுதியில் மின்விளக்கு அமைக்க ஆவன செய்ய வேண்டும்.
மாயவன், ஈரோடு.
புதர்மண்டிய நடைபாதை
ஈரோடு கனிராவுத்தர்குளம் சமீபத்தில் சீரமைக்கப்பட்டது. நடை மேடையும் அமைக்கப்பட்டது. இதில் காலை மற்றும் மாலை வேளையில் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்கிறார்கள். ஆனால் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக நடைமேடையில் செடி-கொடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. இதனால் பாம்பு மற்றும் விஷ பூச்சிகளின் நடமாட்டம் காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுரேஷ், ஈரோடு.
பாராட்டு
அந்தியூர் அருகே பிரம்மதேசம் பகுதியில் மிகவும் பழுதடைந்த மின்கம்பம் ஒன்று ஆபத்தான நிைலயில் காணப்பட்டது. இதுபற்றி தினத்தந்தி புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. இதையடுத்து மின்வாரிய அதிகாரிகள் பழுதடைந்த மின்கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பம் அமைத்துள்ளார்கள். எனவே பொதுமக்கள் நலன் கருதி செய்தி வெளியிட்டு உதவிய தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் சார்பில் பாராட்டையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
ரவீந்திரன், அந்தியூர்.