வாகனத்தில் வந்த 2 பேரை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளை: பொதுமக்கள் சாலை மறியல்

அண்டகுளம் விலக்கு பகுதியில் தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபடும் கும்பலை கைது செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2024-01-31 09:31 GMT

புதுக்கோட்டை அருகே பூங்குடி கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 38). இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்துவிட்டு தற்போது சொந்த ஊருக்கு வந்துள்ளார். இவர் தனது ஊரை சேர்ந்த சீனிவாசன் என்பவருடன் காரில் இலுப்பூர் சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். புதுக்கோட்டை அருகே அண்டகுளம் விலக்கு பகுதியில் தஞ்சை தேசிய நெடுஞ்சாலையோரம் காரை நிறுத்திவிட்டு இயற்கை உபாதை கழிக்க 2 பேரும் சென்றனர்.

அப்போது வனப்பகுதியில் இருந்து 7 பேர் கொண்ட ஒரு கும்பல் திடீரென வந்து செந்தில்குமார், சீனிவாசனை சூழ்ந்து, அரிவாள், கத்தியை காட்டி மிரட்டியும், தாக்கியும் அவர்களை கட்டிப்போட்டனர்.

மேலும் செந்தில்குமார் அணிந்திருந்த மோதிரம், சங்கிலி உள்பட 13 பவுன் நகைகள், ரூ.15 ஆயிரம் மற்றும் 2 பேரிடம் இருந்த செல்போன்களையும் பறித்தனர். தொடர்ந்து 2 பேரையும் அவர்கள் சித்ரவதை செய்துள்ளனர். பின்னர் கொள்ளையடித்த நகை, பணம் உள்ளிட்டவற்றுடன் அங்கிருந்து அந்த மர்ம கும்பல் தப்பிச்சென்றது.

அந்த கும்பல் தாக்கியதில் காயமடைந்த 2 பேரும் கட்டுகளை அவிழ்த்துக்கொண்டு, அங்கிருந்து தப்பினர். மேலும் இதுகுறித்து கணேஷ்நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். காயமடைந்த 2 பேரும் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்த தகவல் செந்தில்குமாரின் ஊரில் பரவியது. மேலும் கொள்ளை சம்பவம் நடந்த இடத்தில் இதுபோன்று மர்மகும்பல் தொடர்ந்து வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடுவதாகவும், இதனை தடுக்கக்கோரியும், மர்ம கும்பலை கைது செய்யக்கோரியும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் செந்தில்குமாரின் உறவினர்கள் அண்டகுளம் விலக்கு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக கணேஷ்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்