புதுக்கோட்டையை உலுக்கிய கொலை, கொள்ளை வழக்கு - கேரளா விரைகிறது தமிழக போலீஸ்..!

புதுக்கோட்டையில் 175 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 40 பவுன் நகைகளை மீட்பதற்காக புதுக்கோட்டை போலீசார் கேரளா விரைகின்றனர்.;

Update: 2022-05-30 06:42 GMT

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்பட்டினத்தில் தொழிலதிபர் முகமது நிஜாம் கடந்த ஏப்ரல் மாதம் 24-ந்தேதி கொலை செய்யப்பட்டு அவரது வீட்டிலிருந்த 175 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் ஏற்கெனவே 8 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 62 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட ஜோஸ்மில்டன் என்பவர் துபாய்க்கு தப்பிச் சென்றார். இந்திய தூதரகத்தின் உதவியுடன் அவரையும் இந்தியா அழைத்து வந்து நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரிடமிருந்து 17 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில் மீதமுள்ள நகைகளை எங்கு வைத்துள்ளனர் என்பது குறித்து போலீசார் ஜோஸ்மில்டனிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது ஏற்கெனவே கைது செய்யப்பட்ட 8 பேரில் ஒருவரான யூனிஸ் என்பவர் கேரளாவில் 40 பவுனுக்கும் அதிகமான நகைகளை அடகு வைத்தும் விற்பனை செய்தும் உல்லாசமாக இருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அந்த நகைகளை மீட்பதற்காக புதுக்கோட்டை மாவட்ட போலீசார் கேரளா விரைந்துள்ளனர்.

இன்று அல்லது நாளை குற்றவாளிகள் 9 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, அதன்பின்பு காவலில் எடுத்து விசாரித்து மீதமுள்ள நகைகளை பறிமுதல் செய்வது குறித்த நடவடிக்கைகளை போலீசார் மேற்கொள்ள உள்ளனர். மேலும் இந்த வழக்கில் ஏற்கெனவே 9 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் பலர் சிக்க வாய்ப்புள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்