புதுக்கோட்டையில் வெயிலின் உக்கிரம் அதிகம்
புதுக்கோட்டையில் வெயிலின் உக்கிரம் அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
வெயில் சுட்டெரிக்கிறது
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இந்த ஆண்டு வெயிலின் வெப்ப அலை அதிகமாக இருக்கும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அக்னி நட்சத்திரம் வருகிற 4-ந் தேதி தொடங்கி 29-ந் தேதி முடிவடைய உள்ளது. பொதுவாக அக்னி நட்சத்திர கால கட்டத்தில் தான் வெயிலின் உக்கிரம் அதிகமாக இருக்கும். ஆனால் அதற்கு முன்பாக தற்போதே வெயில் சுட்டெரிக்கிறது.
புதுக்கோட்டையில் கடந்த ஓரிரு நாட்களாக வெயிலின் உக்கிரம் அதிகமாக உள்ளது. தினமும் சராசரி 100 டிகிரி அளவில் வெயில் அளவு பதிவாகிறது. இந்த சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இரு சக்கர வாகனங்களில் செல்லும் போது வெப்ப காற்று முகத்தில் வீசுவதால் அனல் பறக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
வீட்டிற்குள் முடங்கினர்
பொதுமக்கள் வெளியில் செல்லும் போது குடைகளை பிடித்தபடி நடந்து செல்கின்றனர். வெயிலின் வெப்பத்தை சமாளிக்க தங்களால் முயன்ற வெவ்வேறு நடவடிக்கைகளை பொதுமக்கள் கையாண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்றும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் வெளியில் பொதுமக்கள் நடமாட்டம் கொஞ்சம் குறைந்திருந்தது. ஒரு சில சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. பொதுமக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடந்தனர்.
நீர் மோர் பந்தல்கள்
வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க தர்பூசணி, நுங்கு சாப்பிட்டும், இளநீர், கரும்பு சாறு, ஜூஸ் வகைகள் அருந்தி பொதுமக்கள் சமாளித்து வருகின்றனர். ஆங்காங்கே ஒரு சில இடங்களில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டுள்ள நிலையில் அதில் வினியோகிக்கப்படும் மோர், தண்ணீர், சர்பத் உள்ளிட்ட நீர் பானங்களை அருந்தி பொதுமக்கள் தாகம் தணிக்கின்றனர். இதனால் நீர் மோர் பந்தல்களிலும் கூட்டம் அலைமோதுகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்கிய பின் வெயிலின் தாக்கம் இன்னும் கொளுத்தி எடுக்கும் என்பதை எண்ணி பொதுமக்கள் கலக்கமடைந்துள்ளனர்.