போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி தவிக்கும் புதுக்கோட்டை நகரம்
புதுக்கோட்டை நகரம் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி தவிப்பதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
கடைவீதிகள்
புதுக்கோட்டை நகரப்பகுதியானது சமஸ்தான காலத்தில் மன்னர்களால் கட்டமைக்கப்பட்ட பகுதியாகும். பொதுவாக புதுக்கோட்டை நகரப்பகுதியை 4-க்கு 4-க்கு என 16 வீதியை கொண்டதாக பேச்சுவழக்கில் கூறப்படுவது உண்டு. நகரின் முக்கிய கடை வீதியான கீழ ராஜ வீதி பெயர் பெற்றதாகும். கீழ ராஜ வீதியை சுற்றி அமைந்துள்ள கடைவீதிகளிலும் ஏராளமான கடைகளும், வணிக நிறுவனங்களும் அமைந்துள்ளன. நாளுக்கு நாள் மக்கள் தொகை எண்ணிக்கைக்கு ஏற்ப வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளதால் புதுக்கோட்டை நகரப்பகுதி தற்போது பரபரப்பாகவே காணப்படுகிறது.
குறிப்பாக நகரின் மையப்பகுதியான கீழ ராஜ வீதி, மேல ராஜ வீதி, வடக்கு ராஜ வீதி, தெற்கு ராஜ வீதி மற்றும் இதனை சுற்றியுள்ள வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதற்கு சாலையோரம் இருசக்கர வாகனங்கள் முறையாக நிறுத்தப்படாததும், போக்குவரத்து வாகன விதிமுறைகள் பின்பற்றாததும் எனக்கூறப்படுகிறது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இது குறித்து பொதுமக்கள் தரப்பில் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-
போக்குவரத்து நெரிசல்
ராஜா முகமது:- புதுக்கோட்டை நகரில் கீழ ராஜ வீதி, கீழ 2-ம் வீதியில் ஆக்கிரமிப்புகள் முறையாக அகற்றப்படவில்லை. கடைவீதியில் மக்கள் கூட்டம் எப்போதும் அதிகமாக காணப்படும். கடைவீதிக்கு இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் சாலையோரம் தாறுமாறாக வண்டியை நிறுத்தி விட்டு செல்கின்றனர். ஆட்டோவும் தாறுமாறாக நிறுத்தி செல்கின்றனர். கீழ ராஜ வீதியில் ஒரு வழிப்பாதை அறிவிப்பு இருந்தாலும் கீழ ராஜ வீதியில் குறுக்கு சாலையின் வழியாக கார்கள் அதிகம் வந்துவிடுகின்றன. கீழ ராஜ வீதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த போலீசார், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிகள் திறந்த பின் இதனை விட கூடுதலாக போக்குவரத்து நெரிசல் இருக்கும். எனவே அதற்கு முன்பாகவே போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும்.
வாகனங்கள் நிறுத்துமிடம்
சினேகா:- நகரில் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண சாலை விரிவாக்க பணிகள் மேற்கொண்டால் நல்லது. அதுபோல கடைவீதிகளில் வாகனங்கள் நிறுத்துமிடம் வசதி தனியாக ஏற்படுத்த வேண்டும். போக்குவரத்து சிக்னல்களும் செயல்பட்டால் நன்றாக இருக்கும். பொதுமக்களும் ஒரு வழிப்பாதையை முறையாக கடைப்பிடித்தால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படாது.
விழிப்புணர்வு தேவை
சுப்பையா:- கீழ ராஜ வீதியில் சாலையின் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் பெரும் சிரமமாக உள்ளது. போலீசாரும், அதகாரிகளும் பல முறை விழிப்புணர்வு ஏற்படுத்தியும் நடக்கவில்லை. தற்போது கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிற நிலையில் போக்குவரத்து நெருக்கடியில் பெரும் அவதி ஏற்படுகிறது. அண்ணா சிலையில் இருந்தும், பிருந்தாவன் பகுதியில் இருந்தும் இருபுறமும் சாலையோரம் இருசக்கர வாகனங்கள், கார்கள் நிறுத்தப்படும் போது மற்ற வாகனங்கள் செல்லும் போது நெரிசல் ஏற்படுகிறது. ஒதுங்குவதற்கு கூட வழியில்லாமல் போய்விடுகிறது. இந்த வழியாக ஆம்புலன்சுகள் செல்லும் போதும் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி கொள்கிறது. சாலையில் வாகனங்கள் விலகி செல்வதற்கு கூட வழியில்லாமல் போய்விடுகிறது. சாலையோரம் வாகனங்கள் நிறுத்த போலீசாரால் கயிறு பதிக்கப்பட்டு வரையறுக்கப்பட்டிருந்தது. ஆனால் அதனை மக்கள் விழிப்புணர்வுடன் பின்பற்றவில்லை. வாகனங்கள் நிறுத்தும் போது முறையாக நிறுத்த வேண்டும். மற்ற வாகன போக்குவரத்து, பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் வாகனங்களை நிறுத்த வேண்டும். இந்த விஷயத்தை பொறுத்த வரை மக்கள் தான் விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
போலீசார் அபராதம் விதிப்பு
புதுக்கோட்டை டவுன் போக்குவரத்து ஒழுங்குப்படுத்தும் பிரிவு போலீசாரும் அவ்வப்போது கடைவீதியில் ரோந்து பணி மேற்கொண்டு சாலையோரம் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவது தொடர்பாக அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருப்பினும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது தான் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.