புதுச்சேரி பாஜக பிரமுகர் கொலை வழக்கு: கைதான ரவுடி கடலூரில் வசித்த வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
புதுச்சேரி பா.ஜ.க. பிரமுகர் கொலை வழக்கில் கைதான ரவுடி கடலூரில் வசித்து வந்த வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
புதுச்சேரி மாநிலம் கணுவாப்பேட்டையை சேர்ந்தவர் ரங்கசாமி. ஆசிரியர். இவரது மகன் செந்தில்குமரன் (வயது 46). பா.ஜ.க. பிரமுகரான இவர், மங்கலம் தொகுதி பொறுப்பாளராகவும், புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் தீவிர ஆதரவாளராகவும் இருந்து வந்தார். செந்தில்குமரன் கடந்த 26.3.2023 அன்று இரவு மங்கலம் தொகுதி அரியூரில் நடந்த பா.ஜ.க. கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு வில்லியனூரில் உள்ள பேக்கரி கடையில் டீ குடித்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு 3 மோட்டார் சைக்கிளில் முகமூடி அணிந்தவாறு வந்த ஒரு கும்பல் திடீரென நாட்டு வெடிகுண்டை செந்தில்குமரன் மீது வீசியது. அந்த குண்டு செந்தில்குமரனின் அருகில் விழுந்து வெடித்தது. இதனால் சுதாரித்து கொண்ட செந்தில்குமரன் அங்கிருந்து தப்பியோட முயன்றார். ஆனால் அதற்குள் அந்த கும்பல் மற்றொரு நாட்டு வெடிகுண்டை தூக்கி வீசியது. அந்த வெடிகுண்டு அவரது மேல் விழுந்து பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது.
வெடிகுண்டு வீசி கொலை
வெடிகுண்டு வீச்சில் நிலை குலைந்து கீழே சரிந்த அவரை அக்கும்பல் சுற்றி வளைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்தது. இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது. இதுகுறித்த புகாரின்பேரில் வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், நிலத்தகராறு காரணமாக ஏற்பட்ட முன்விரோதத்தில் செந்தில்குமரனை திருக்காஞ்சியை சேர்ந்த பிரபல ரவுடி நித்தியானந்தம் (35), அவரது கூட்டாளிகளான கொம்பாக்கம் சிவசங்கர் (23), கோர்க்காடு ராஜா (23), கார்த்திகேயன் (23), தனத்து மேடு பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் (25), கடலூர் கிளிஞ்சிகுப்பம் பிரதாப் (24), அரியாங்குப்பம் விக்னேஷ் (26) ஆகிய 7 பேர் கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 7 பேரையும் போலீசார் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி புதுச்சேரி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை
இந்நிலையில் இந்த கொலையில் சக்திவாய்ந்த வெடி குண்டு பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. இதனால் இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ.) மாற்றப்பட்டது. இதையடுத்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், புதுச்சேரியில் கொலை நடந்த சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
கொலையாளிகளை வைத்து, அவர்கள் எப்படி கொலை செய்தார்கள் என்று காட்சிப்படுத்தி வீடியோவில் பதிவு செய்தனர்.
மேலும் முக்கிய குற்றவாளியான நித்தியானந்தம் கடலூர் செம்மண்டலம் பெண்ணை கார்டன் வைகை வீதியில் உள்ள வாடகை வீட்டில் கடந்த 1 மாதமாக குடும்பத்தோடு வசித்து வந்தது என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு தெரிந்தது.
இதையடுத்து கேரளாவை சேர்ந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று காலை 11 மணி அளவில் கடலூர் வைகை வீதியில் உள்ள நித்தியானந்தம் வீட்டுக்கு வந்தனர். அங்கிருந்த அவரது குடும்பத்தினரிடம் துருவி, துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அவருக்கு வாடகைக்கு விட்ட வீட்டின் உரிமையாளரான ஓய்வுபெற்ற அதிகாரியிடமும் தீவிரமாக விசாரணை நடத்தினர். இந்த விசாரணை இரவு 7.30 மணி வரை நீடித்தது. இந்த சோதனை முடிவில் ஒரு மோட்டாா் சைக்கிள் மற்றும் முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து எடுத்து சென்றனர்.