தமிழில் உருவாக்கப்பட்டுள்ள அமெரிக்க கவிஞர் மாயா ஆஞ்சலோவின் படைப்புகள் வெளியீடு
தமிழில் உருவாக்கப்பட்டுள்ள அமெரிக்க கவிஞர் மாயா ஆஞ்சலோவின் படைப்புகளை சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகம் வெளியிட்டுள்ளது.
சென்னை,
புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளர் மார்கரெட் ஆன் ஜான்சன் என்ற மாயா ஆஞ்சலோ. இவர் கவிஞர், நடிகை மற்றும் மக்கள் உரிமை போராளியாக செயல்பட்டு வந்தார். புத்தகங்கள், கவிதைகள் உள்பட பல்வேறு படைப்புகளை வெளியிட்டுள்ளார். அவரது படைப்புகள் நாடகங்கள், திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் எடுத்து பயன்படுத்தப்பட்டுள்ளன.
அனைத்து தரப்பினரையும் இணைத்த முன்னேற்றம், மகளிர் மேம்பாடு மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றுக்கு ஆதரவாக தன் வாழ்நாள் முழுவதும் போராடிய ஆப்பிரிக்க-அமெரிக்க பெண்ணான மாயா ஆஞ்சலோ, அமெரிக்காவில் உச்சபட்ச விருதான அதிபர் பதக்கம் உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். இவர் 2014-ம் ஆண்டு 86 வயதில் மரணமடைந்தார்.
மாயா ஆஞ்சலோவின், "கூண்டுப்பறவை ஏன் பாடுகிறதென்று எனக்குத் தெரியும்" என்ற புத்தகம், புனைக் கதை சாராத புத்தக விற்பனையில் சிறப்பிடம் பெற்றதாக உள்ளது. இந்த புத்தகத்தை பெர்னார்ட் சந்திரா தமிழில் மொழிபெயர்த்துள்ளார். "என்றாலும் நான் எழுகிறேன்" என்ற கவிதைத் தொகுப்பு 32 கவிதைகளை உள்ளடக்கியாகும். இதை சிவகுமார் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
மாயா ஆஞ்சலோவின் அந்த 2 புத்தகங்களின் முதல் அதிகாரப்பூர்வ தமிழ்ப் பதிப்பை, காலச்சுவடு பதிப்பகத்துடன் இணைந்து சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகம் இன்று அமெரிக்க மைய கலையரங்கில் நடந்த விழாவில் வெளியிட்டுள்ளது. கருப்பர் வரலாற்று மாதம் மற்றும் மகளிர் வரலாற்று மாதத்தை குறிக்கும் வகையில் இந்த புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த நிகழ்ச்சியில் மேற்கு வங்க முன்னாள் கவர்னர் கோபால்கிருஷ்ண காந்தி, எழுத்தாளரும் சமூக ஆர்வலருமான சல்மா ஆகியோர் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டனர். இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பொது உறவு அமைச்சக ஆலோசகர் குளோரியா பெர்பனா, சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தின் பொது உறவு அலுவலர் ஸ்காட் ஹார்ட்மன், செய்தி தொடர்பாளர் சமந்தா ஜாக்சன், காலச்சுவடு பதிப்பகத்தின் பதிப்பாளர் கண்ணன் சுந்தரம் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க வெளியுறவுத் துறையின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய அலுவலகத்தின் ஊடக மற்றும் பொது உறவுக்கான பிரிவு துணை இயக்குனர் ஆன் சேஷாத்ரி பேசுகையில், "மாயா ஆஞ்சலோ படைப்புகளின் மொழிபெயர்ப்பு பல்வேறு மொழிகளில் வந்திருந்தாலும், அதிகாரப்பூர்வ மொழிபெயர்ப்பு எதுவும் தமிழில் வரவில்லை. ஆனால் தற்போது சென்னை அமெரிக்க துணைத் தூதரகம் அந்த மொழிபெயர்ப்புகளை சாத்தியம் ஆக்கியுள்ளது.
தனது படைப்புகளில் அவர் மையப்படுத்தும் சகிப்புத்தன்மை, நீதி மற்றும் சமத்துவம் தென்னிந்தியா மற்றும் உலகெங்கிலும் உள்ள தமிழ் வாசகர்களிடம் சென்றடையும்'' என்று கூறினார். மாயா ஆஞ்சலோவின் புத்தகங்களை படிப்பதற்கு அமெரிக்க மையத்தின் நூலக உறுப்பினர்கள் எடுத்து செல்லலாம். இவ்வாறு அவர் கூறினார்.