'சிவாஜி' படத்தில் ரஜினிகாந்த் பயன்படுத்திய காருடன் 'செல்பி' எடுத்த பொதுமக்கள்

சென்னை ஏ.வி.எம். ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நடைபெற்ற பாரம்பரிய கார் மற்றும் மோட்டார் சைக்கிள் கண்காட்சியின் நிறைவு நாளான நேற்று ‘சிவாஜி' படத்தில் ரஜினிகாந்த் பயன்படுத்திய காருடன் பொதுமக்கள் ஆர்வமுடன் ‘செல்பி’ எடுத்து மகிழ்ந்தனர்.

Update: 2022-12-18 18:47 GMT

சென்னை,

சென்னை மயிலாப்பூரில் உள்ள ஏ.வி.எம். ராஜேஸ்வரி திருமண மண்டப வளாகத்தில் 'தி மெட்ராஸ் ஹெரிடேஜ் மோட்டரிங் கிளப்' சார்பில் 2 நாள் பாரம்பரிய கார் மற்றும் மோட்டார் சைக்கிள் கண்காட்சி நடந்தது. கண்காட்சியின் நிறைவு நாளான நேற்று பெற்றோர் தங்கள் குழந்தைகளை பாரம்பரிய கார்கள் முன்பு நிறுத்தி 'செல்பி' மற்றும் வீடியோ பதிவு செய்து மகிழ்ந்தனர்.

குறிப்பாக மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். பயன்படுத்திய 'டாட்ஜ் கிங்ஸ்வே' கார் மற்றும் 'சிவாஜி' படத்தில் நடிகர் ரஜினிகாந்த் பயன்படுத்திய 'எம்.ஜி. - டி.பி.' காரையும் பொதுமக்கள் ஆர்வமுடன் 'செல்பி' எடுத்து மகிழ்ந்தனர்.

'மோரிஸ் மைனர்' பட்டம்

கண்காட்சியில் இடம் பெற்ற ஒரு 'மோரிஸ் மைனர்' காரின் உரிமையாளரான மயிலாப்பூரை சேர்ந்த பி.எஸ்.சீனிவாசன் (வயது 88) என்பவர் கூறியதாவது:-

என்னிடம் மோரிஸ் வகை கார்கள் 7 உள்ளன. அனைத்து கார்களும் ஓடும் நிலையில் உள்ளன. இதனால் என்னை 'மோரிஸ் மைனர்' என்று பட்டம் சூட்டி அழைப்பவர்களும் உண்டு. எனக்கு பள்ளிப்பருவத்திலேயே கார் மீது ஆர்வம் வந்தது. எனது 31-வது வயதில் முதல் காரை வாங்கினேன். எனது 'மோரிஸ் மைனர்' காரை அப்போது 5,600 ரூபாய்க்கு வாங்கினேன். இப்போது, அதன் மதிப்பு ரூ.56 லட்சம் அல்லது ரூ.5.6 கோடி எதுவானாலும் நான் சொல்வது தான் விலை. அந்த அளவிற்கு இந்த காரின் மதிப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மலரும் நினைவுகள்

கண்காட்சியை பார்வையிட்ட கார் ஆர்வலர்களும், நண்பர்களுமான சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியை சேர்ந்த முத்துக்குமார், அண்ணாநகரை சேர்ந்த பார்த்தசாரதி, நொளம்பூரை சேர்ந்த ராஜேஷ்குமார் ஆகியோர் கூட்டாக கூறும்போது, "அந்த காலத்தில் கார் ஓட்டுவது ஒரு பெரிய கலையாக இருந்தது. கார் ஓட்டுபவருக்கு பாதி மெக்கானிசம் தெரிந்து இருக்க வேண்டும். பள்ளிக்கு செல்லும் போது வழியில் நின்ற கார்களை தள்ளிவிட்ட அனுபவங்கள் மலரும் நினைவுகளாய் இந்த கார் கண்காட்சியை பார்வையிடும்போது மலர்கின்றன" என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்