குறைந்தழுத்த மின்சாரத்தால் பொதுமக்கள் அவதி

குறைந்தழுத்த மின்சாரத்தால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

Update: 2023-06-04 18:45 GMT

ஆர்.எஸ்.மங்கலம், 

ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா சோழந்தூர் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. சோழந்தூர் பஸ் நிறுத்தம் அருகே 30 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட மின்மாற்றி மூலமாக சோழந்தூர், மேட்டு சோழந்தூர், சீனாங்குடி ஆகிய கிராமங்களுக்கு மின்வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் குறைந்த மின்னழுத்தத்தம் ஏற்படுகிறது. மேலும் இரவு நேரங்களில் மாணவர்கள் படிக்க முடியாமலும், கொசு தொல்லைகளாலும் மக்கள் தூங்க முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். அவ்வப்போது திடீரென வரும் உயர் மின்னழுத்தத்தால் வீட்டில் உள்ள மின்சார சாதனங்கள் பழுதடைந்து வருகிறது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரியிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக செயல்படுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

எனவே, அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு சீரான மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தவறினால் இப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாக கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளனர். மேலும், புதிய மின்மாற்றி அமைத்து சீராக மின்சாரம் கிடைப்பதற்கு கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சோழந்தூர் கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்