கடும் பனிப்பொழிவால் பொதுமக்கள் அவதி
ஓசூர் பகுதியில் கடும் பனிப்பொழிவால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
ஓசூர்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு இருந்து வருகிறது. மேலும் கடுங்குளிர் பொது மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, நேற்று ஓசூர் நகர பகுதிகளில் பனிப்பொழிவு சற்று குறைவாகவே காணப்பட்ட நிலையில் கிராம பகுதிகளில் அதிகளவில் பனிமூட்டம் காணப்பட்டது. ஓசூர் அருகே உளியாளம், சென்னசந்திரம், ஜீமங்கலம், பாகலூர், ஆவலப்பள்ளி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் காலை நேரத்தில் கடுமையான பனிப்பொழிவு காணப்பட்டது.
இதனால் காலை நேரத்தில், இரு சக்கர வாகனங்களில் சென்ற பொதுமக்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர். மேலும் கடுமையான குளிரை சமாளிக்கும் விதமாக ஸ்வெட்டர், குல்லா அணிந்து வெளியே நடமாடினர். காலையில் தோட்ட வேலைகள் மற்றும் பல்வேறு பணிகளுக்காக சென்ற பொதுமக்கள் இந்த கடும்பனிப்பொழிவு மற்றும் குளிரால் அவதிக்குள்ளாகினர்.