இறந்தவர் உடலுடன் பொதுமக்கள் போராட்டம்

பொள்ளாச்சி அருகே மயானத்தில் அடக்கம் செய்ய போதிய இட வசதி கோரி இறந்தவர் உடலுடன் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-06-08 16:51 GMT

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி அருகே மயானத்தில் அடக்கம் செய்ய போதிய இட வசதி கோரி இறந்தவர் உடலுடன் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

மயான வசதி

பொள்ளாச்சி அருகே நல்லூத்துக்குளியில் உள்ள அருந்ததியர் காலனியில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய ஆற்றோரத்தில் சிறிய மயானம் உள்ளது. இதனால் ஒரு மாதத்தில் 2 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் இறந்தால் அடக்கம் செய்வதில் சிரமம் ஏற்படுகிறது. சில நேரங்களில் ஏற்கனவே புதைத்த உடலை தூக்கி வெளியே வைத்து விட்டு, மற்றொரு உடலை புதைத்த சம்பவங்களும் நடந்து இருக்கிறது.

இதுதொடர்பாக மயான வசதி ஏற்படுத்தி தரக்கோரி சப்-கலெக்டர், ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் மனு கொடுத்தும், எந்த நடவடிக்கையும் இல்லை. இந்தநிலையில் நேற்று முன்தினம் அருந்ததியர் காலனியை சேர்ந்த நாகராஜன் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்தார். அவரது உடலை புதைக்க மயானத்தில் குழி தோண்டிய போது, எலும்பு கூடுகள் மற்றும் அழுகிய நிலையில் பிணம் இருந்ததால் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் இறந்தவரின் உடலை புதைக்க முடியாத நிலை ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

இதன்காரணமாக ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் இடவசதி கோரி இறந்தவர் உடலை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சப்-கலெக்டர் அலுவலகத்திற்கு எடுத்து வந்து போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர். இதை அறிந்த தாசில்தார் மல்லிகா, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

பேச்சுவார்த்தையின் போது பொதுமக்கள் ஆற்றங்கரையில் 6 அடிக்கு 4 அடி என்ற அளவில் மட்டும் மயானம் உள்ளது. ஆற்றோரத்தில் இருப்பதால் புதைக்கப்பட்ட உடல்கள் எளிதில் மக்குவதில்லை. மேலும் 1½ அடி குழி தோண்டினால் ஆற்று நீர் வெளியே வந்து விடுகிறது. இதனால் இறந்தவர்களின் உடலை புதைக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றோம் என்றனர்.

தீர்வு காணப்படும்

இதையடுத்து தாசில்தார் மல்லிகா கூறுகையில், நாளை (இன்று) சப்-கலெக்டர் அலுவலகத்தில் நல்லூத்துக்குளி மயான பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என்றார். மேலும் ஊராட்சி நிர்வாகம் மூலம் மயானத்தில் உள்ள புதர்களை சுத்தப்படுத்தி கொடுப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் இறந்தவரின் உடலை மயானத்திற்கு கொண்டு சென்று, அதே பகுதியில் வேறொரு குழி தோண்டி அடக்கம் செய்தனர். இந்த சம்பவம் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்