பொதுப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் மறியல்
பொதுப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.;
துவரங்குறிச்சி:
துவரங்குறிச்சி அருகே வளநாடு கைகாட்டியில் காலனி தெரு பகுதிக்குச் செல்லும் பொதுப்பாதையை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் ஆகிரமித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பாதை மிகவும் குறுகலாக உள்ளதால் அவ்வழியாக அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத நிலை உள்ளது. ஆகவே பொதுப்பாதை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மருங்காபுரி தாசில்தாரிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதை கண்டித்து நேற்று அப்பகுதி பொதுமக்கள் வளநாடு செல்லும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த வளநாடு போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்தனர். இதனை அடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியலால் அப்பகுதியில் அரை மணி மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.