கல்விக்கும், சமூக சேவைக்கும் பொதுமக்கள் அதிகசெலவு செய்கிறார்கள்

கல்விக்கும், சமூக சேவைக்கும் பொதுமக்கள் அதிகசெலவு செய்கிறார்கள்

Update: 2022-07-25 19:56 GMT

கல்விக்கும், சமூக சேவைக்கும் பொதுமக்கள் அதிகசெலவு செய்கிறார்கள் என மத்திய புள்ளியியல்துறை மண்டல இணை இயக்குனர் விஷ்ணுராஜ் கூறினார்.

பயிற்சி முகாம்

மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்டங்கள் அமலாக்கத்துறை அமைச்சகத்தின் சார்பில் பொதுமக்களின் பொருளாதார நுகர்வு சக்தி குறித்த கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. இந்த கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் தென் மண்டல புள்ளியியல் துறையில் பணியாற்றும் முதன்மை புள்ளியியல் அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் தஞ்சையில் நேற்று தொடங்கியது.

தொடக்கவிழாவில் முதுநிலை புள்ளியியல் அலுவலர் வெங்கட்ராமன் வரவேற்றார். மதுரை மண்டல முதன்மை புள்ளியியல் அலுவலர்கள் பழனியப்பன், பிரேமாராணி, வெங்கட்ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த முகாமை மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்டங்கள் அமலாக்கத்துறை அமைச்சகத்தின் மதுரை மண்டல இணை இயக்குநர் விஷ்ணுராஜ் தொடங்கி வைத்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கணக்கெடுப்பு பணி

மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்டங்கள் அமலாக்கத்துறை அமைச்சகத்தின் தேசிய புள்ளியியல் அலுவலகம் சார்பில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை கணக்கெடுப்பு நடத்தப்படும். ஒரு குடும்பத்தின் பொருளாதார வரவு எவ்வளவு, செலவினங்கள் என்ன? சேமிப்புகள் என்னென்ன என்பது தொடர்பான புள்ளி விவரங்கள் சேகரிக்கப்படும். இந்த பணியில் ஈடுபடும் முதன்மை புள்ளியியல் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்த பயிற்சியில் தென் தமிழகத்தில் உள்ள 14 மாவட்டங்களை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டுள்ளனர். அவர்களுக்கு 3 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டு, பின்னர் கணக்கெடுப்பு பணிக்கு அனுப்பி வைக்கப்படுவர். இந்த பணி 1 வருட காலத்திற்கு நடைபெறும்.

கல்விக்கு அதிக செலவு

இந்த கணக்கெடுப்பில் பெறப்படும் தகவல்கள் மூலம் மக்களின் வாழ்வு நிலை சமூக நுகர்வு, சமூக நலன், மற்றும் நுகர்வில் ஏற்படும் சமனற்ற நிலை போன்றவற்றை அறிந்து புள்ளியியல் குறியீடுகளை தொகுக்க பயன்படுகிறது. மக்கள் உணவுக்கு செலவு செய்வது குறைந்து, கல்விக்கும், சமூக சேவைக்கும் அதிகமான அளவு செலவு செய்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட 14 மாவட்டங்களை சேர்ந்த புள்ளியியல் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த பயிற்சி முகாம் நாளை (புதன்கிழமை) நிறைவடைகிறது.

Tags:    

மேலும் செய்திகள்