நல்லூர் கூட்டுறவு கடன் சங்கத்தை பொதுமக்கள் முற்றுகை

அடகு வைத்த நகைகளை தங்களிடம் காட்டுமாறு கூறி நல்லூர் கூட்டுறவு கடன் சங்கத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2022-06-02 18:51 GMT

காரையூர்:

அடகு வைத்த நகைகள்

காரையூர் அருகே நல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இந்த சங்கத்தில் நல்லூர், வாழைக்குறிச்சி, நெறிஞ்சிக்குடி, கூடலூர் உள்ளிட்ட ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் சுமார் 800-க்கும் மேற்பட்டோர் தங்கள் நகைகளை வைத்து விவசாய நகைக்கடன்கள் மற்றும் நகைக்கடன்களை பெற்றுள்ளனர். இங்கு கிருஷ்ணன் என்பவர் அவரது மகளின் நகைகளை வைத்து நகைக்கடன் பெற்றுள்ளார். இந்நிலையில் தனது மகளின் திருமணத்திற்காக அடகு வைத்த நகைகளை திருப்ப நேற்று முன்தினம் வந்துள்ளார். அவரது நகையை ஊழியர்கள் சோதித்து பார்த்தபோது அங்கு அவரது நகையில் பாதி இல்லை என கூறப்படுகிறது. இதனால் அவரது மகளின் திருமணம் தடைப்படும் சூழ்நிலையில் ஊழியர்கள் அவரை புதுக்கோட்டைக்கு அழைத்து சென்று அவர் அடகு வைத்தது போன்ற நகையை மாற்றாக வாங்கி கொடுத்துள்ளனர்.

கூட்டுறவு சங்கம் முற்றுகை

இதுபோல் அடகு வைத்த பொதுமக்களின் நகையும் தொலைந்து போயிருக்கலாம் என்று நினைத்து சமூக வலைத்தளங்களில் இக்கருத்தை பதிவிட்டு தங்களது நகை உள்ளதா என்று பரிசோதித்து கொள்ளுங்கள் என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதனால் பீதியடைந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் நல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து அவர்கள் ஊழியர்களிடம் தங்கள் நகைகளை காட்டுமாறு கூறியுள்ளனர். அப்போது ஊழியர்கள் நகைகளை காட்ட எங்களுக்கு சிறிது அவகாசம் வேண்டும் என்று கூறினர். இதையடுத்து பொதுமக்கள் சமாதானமடைந்து கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் நல்லூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்