மணல் குவாரியை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம்
மணல் குவாரியை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம்
திருவையாறு:
திருவையாறு-திருக்காட்டுப்பள்ளி சாலையில் வரிசையாக நிற்கும் லாரிகளால் போக்குவரத்து ெநரிசல் ஏற்படுவதால் மணல் குவாரியை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
மணல் குவாரி
திருவையாறை அடுத்த வடுககுடி, மருவூர், சாத்தனூர் ஆகிய ஊராட்சிகளின் கொள்ளிடம் ஆற்றில் அரசு மணல் குவாரி உள்ளது. இங்கு ஆன்லைன் மூலம் பதிவு செய்பவர்களுக்கு மணல் வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு குவாரி திறக்கப்பட்டு மணல் வழங்கப்பட்டு வந்தன. ஆனால் மாட்டு வண்டிக்காரர்கள் தங்களுக்கும் மணல் வழங்க வேண்டும் என கூறி மணல் குவாரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து அவர்களுக்கு வேறு ஒரு இடத்தை ஒதுக்கி பிரச்சினை முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து மணல் குவாரி செயல்பட்டு வந்தது.
முற்றுகை போராட்டம்
இந்த நிலையில் குவாரிக்கு மணல் அள்ள வரும் லாரிகள் திருவையாறு-திருக்காட்டுப்பள்ளி சாலையில் வரிசையாக நிற்கின்றன. இதனால் மருவூர், வடுககுடி, சாத்தனூர் ஆகிய ஊராட்சிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பள்ளி-கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், அரசு பணியாளர்கள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருவதாக கூறி ஊராட்சிமன்ற தலைவர் மணிகண்டன் தலைமையில் அந்த பகுதி மக்கள் மணல் குவாரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மருவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.