சிறுத்தையை தேடும் பணியில் பொதுமக்கள் இடையூறு செய்ய வேண்டாம்: வனத்துறையினர் கோரிக்கை

மயிலாடுதுறையில் நடமாடும் சிறுத்தையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2024-04-05 08:18 GMT

மயிலாடுதுறை,

மயிலாடுதுறை மாவட்டம் செம்மங்குளம், ஆரோக்கியநாதபுரம் பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் உள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் நேற்று முன்தினம் வெளியாகின. இதையடுத்து, சிறுத்தையை பிடிக்கும் பணி இன்று 3வது நாளாக நீடித்து வருகிறது. சிறுத்தையை பிடிக்க ராட்சத வலை, கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆரோக்கியநாதபுரத்தில் சுற்றித்திரிந்த சிறுத்தை சித்தர்காடு பகுதிக்கு இடம்பெயர்ந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

சித்தர்காடு அருகே உள்ள தண்டபாணி செட்டித்தெருவில் ஆடு ஒன்று கடித்து குதறப்பட்டு இறந்த நிலையில் கிடந்துள்ளது. அந்த ஆடு சிறுத்தையால் வேட்டையாடப்பட்டதா என்று மருத்துவக்குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். இதையடுத்து, சிறுத்தையை பிடிக்க சித்தர்காடு பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், நேற்று இரவு சிறுத்தையை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டபோது சுமார் 100 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பின் தொடர்ந்து வந்ததால் சிறுத்தையை தேடும் பணி கடுமையாக பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

எனவே சிறுத்தையை தேடும் பணியில் பின் தொடர்ந்து இடையூறு செய்ய வேண்டாம் என பொதுமக்களிடம் வனத்துறையினர் கோரிக்கை வைத்துள்ளனர். அத்துடன், தேடுதல் பணிக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு கேட்கவும் வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்