பொதுச்சேவை உரிமை சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

. சட்டப் பேரவையின் அடுத்தக் கூட்டத்தில் இதற்கான சட்ட முன்வரைவை தாக்கல் செய்து நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Update: 2022-12-27 16:38 GMT

சென்னை,

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் பொதுமக்கள் விண்ணப்பித்து நிலுவையில் உள்ள அனைத்து சான்றிதழ்களையும் ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டும் என்று வருவாய்த்துறைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை பிறப்பித்திருக்கிறார். மக்களுக்கு அரசின் சேவைகள் தாமதமின்றி கிடைக்க வேண்டும் என்ற நோக்குடன் முதலமைச்சர் பிறப்பித்துள்ள இந்த ஆணை வரவேற்கத்தக்கது. இதை சட்டப்பூர்வமாக்க தமிழகத்தில் பொதுச்சேவை பெறும் உரிமையை செயல்படுத்த வேண்டும் என்பது தான் பா.ம.க.வின் நிலைப்பாடாகும். அரசு சேவைகள் பொது மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்வதில் பொதுச் சேவை பெறும் உரிமை சட்டம் மிகப்பெரிய திருப்பு முனையாக இருக்கும் என்பதால் தான் கடந்த காலங்களில் இந்த சட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி எண்ணற்ற போராட்டங்களையும், இயக்கங்களையும் பாட்டாளி மக்கள் கட்சி நடத்தியுள்ளது. இந்த சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் இயக்கங்களையும் பாமக நடத்தியுள்ளது. தமிழ்நாட்டில் பொதுச்சேவை பெறும் உரிமைச் சட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக முதல்-அமைச்சருக்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாது. எதிர்க்கட்சியாக இருந்த போது இந்த கோரிக்கையை அவரும் பல முறை வலியுறுத்தியிருக்கிறார். 2021-ம் ஆண்டு சட்டப் பேரவை தேர்தலுக்கான தி.மு.க. தேர்தல் அறிக்கையிலும் இது குறித்த வாக்குறுதி இடம் பெற்றிருந்தது. 2021-ம் ஆண்டில் தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பின்னர் நடைபெற்ற முதல் பேரவைக் கூட்டத்தில் உரையாற்றிய அப்போதைய கவர்னர் பன்வாரிலால் புரோகித் சேவை பெறும் உரிமை சட்டம் விரைவில் இயற்றப்படும் என்று அறிவித்தார்.

எனவே, தமிழக அரசின் சேவைகள் பொதுமக்களுக்கு குறித்த நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்ய பொதுச்சேவை பெறும் உரிமை சட்டம் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். சட்டப் பேரவையின் அடுத்தக் கூட்டத்தில் இதற்கான சட்ட முன்வரைவை தாக்கல் செய்து நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்