குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

கோட்டூர் பேரூராட்சி பகுதியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் திடீர்சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2023-09-02 22:15 GMT


ஆனைமலை


கோட்டூர் பேரூராட்சி பகுதியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் திடீர்சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


குடிநீர் பிரச்சினை


ஆனைமலையை அடுத்த கோட்டூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு கோட்டூர் தனி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தினசரி குடிநீர் வழங்கப்பட்டு வந்த நிலையில், கோட்டூர் திருவள்ளூவர் காலனி பகுதிக்கு கடந்த 3 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மக்கள் கடும் அவதியடைந்தனர். இதுகுறித்து பேரூராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தபோது, லாரி மூலம் குடிநீர் வழங்கப்படும் என்று கூறினர். ஆனால் இரவு 7 மணி வரை காத்திருந்தும் லாரியில் குடிநீர் வழங்கப்படவில்லை.


காலிக்குடங்களுடன் மறியல்


இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கோட்டூர்-ஆழியார் சாலையில் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். அப்போது சீராக குடிநீர் வினியோகம் செய்யக்கோரி கோஷங்கள் எழுப்பினர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த பேரூராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். சாலை மறியல் காரணமாக சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Tags:    

மேலும் செய்திகள்