குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
கடுவனூரில் குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மூங்கில்துறைப்பட்டு,
ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது கடுவனூர். இங்கு 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் இப்பகுதி மக்களுக்கு கடந்த 4 மாதங்களாக சரியான முறையில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
குடிநீருக்காக அவர்கள், காலி குடங்களுடன் அருகில் உள்ள வயல்வெளிகளுக்கு அலைந்து திரிய வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டனர். இது குறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்குள்ள கள்ளக்குறிச்சி- திருவண்ணாமலை சாலையில் காலி குடங்களுடன் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து பாதிப்பு
அப்போது அவர்கள் தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க வேண்டும் என கோரி கோஷங்களை எழுப்பினர். அவர்களிடம் ஊராட்சி மன்ற துணை தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் அவர்கள் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் சங்கராபுரம் போலீசார் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு குடிநீர் முறையாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். அதனை ஏற்று பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.