பொது மக்கள் சாலை மறியல் போராட்டம்

நாட்டறம்பள்ளி அருகே நிரந்தர ஊராட்சி செயலாளரை நியமிக்கக்கோரி பொதுமக்கள் நேற்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2022-06-16 11:45 GMT

ஜோலார்பேட்டை

நாட்டறம்பள்ளி அருகே நிரந்தர ஊராட்சி செயலாளரை நியமிக்கக்கோரி பொதுமக்கள் நேற்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஊராட்சி செயலாளர் மாற்றம்

ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நாட்டறம்பள்ளி அடுத்த அக்ராவரம் ஊராட்சியில் பூபதி என்பவர் ஊராட்சி செயலாளராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனால் அருகில் உள்ள மல்லப்ள்ளி ஊராட்சி செயலாளர் சண்முகத்திற்கு, அக்ராவரம் ஊராட்சி செயலாளராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.

ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக ஊராட்சி செயலாளர் (பொறுப்பு) சண்முகம் அக்ராவரம் ஊராட்சி அலுவலகத்திற்கு சரியாக வருவதில்லை என்றும், இதனால் பணிகள் பாதிக்கப்படுவதாகவும் கூறப்பட்டது. இதனால் ஊராட்சி மன்ற தலைவர் தேவேந்திரன் மற்றும் வார்டு உறுப்பினர் பெருமாள் உள்ளிட்ட அப்பகுதி பொதுமக்கள் நிரந்தர ஊராட்சி செயலாளரை நியமிக்க கோரிக்கை விடுத்தனர்.

சாலை மறியல்

இதுவரை நிரந்தர ஊராட்சி செயலாளர் நியமிக்கபடவில்லை. இதனால் அப்பகுதி பொதுமக்கள் நேற்று காலை புதுப்பேட்டை- நாட்டறம்பள்ளி சாலையில் அக்ராவரம் பஸ் நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன், நாட்டறம்பள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஜோலார்பேட்டை அருகே ஓட்டப்பட்டி ஊராட்சியில் பணியாற்றி வரும் ஊராட்சி செயலாளர் பாண்டியன் என்பவரை உடனடியாக அக்ராவரம் ஊராட்சி செயலாளராக கூடுதல் பொறுப்பு வழங்கி அதற்கான நடவடிக்கை மேற்கொண்டனர். அதைத்தொடர்ந்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இருப்பினும் சிலர் நிரந்தரமாக ஊராட்சி செயலாளர் நியமிக்க வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்