மூங்கில்துறைப்பட்டில் பொதுமக்கள் சாலை மறியல்

சீராக மின்சாரம் வினியோகம் செய்யக்கோரி மூங்கில்துறைப்பட்டில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2023-04-16 18:45 GMT

மூங்கில்துறைப்பட்டு, 

மூங்கில்துறைப்பட்டில் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு அரசு பள்ளி அருகே உள்ள மின்மாற்றி மூலம் மின்வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மின்மாற்றி பழுதானது. இதன் காரணமாக மோகன் நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு மின்வினியோகம் செய்யும் பணி பாதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்தனர்.

இது குறித்து பொதுமக்கள் புகார் அளித்தும் கடந்த 10 நாட்களாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று இரவு 8 மணிக்கு மூங்கில்துறைப்பட்டு பேருந்து நிறுத்தத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்த தகவலின் பேரில் மூங்கில்துறைப்பட்டு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

போக்குவரத்து பாதிப்பு

அப்போது பொதுமக்கள், தங்களுக்கு சீராக மின்வினியோகம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதற்கு இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். அதனை ஏற்று பொதுமக்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்