கொட்டாம்பட்டியில் பொதுமக்கள் சாலை மறியல்

கொட்டாம்பட்டியில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2023-08-25 20:27 GMT

கொட்டாம்பட்டி

கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம் பொட்டப்பட்டி ஊராட்சியில் பொட்டப்பட்டி, லெக்கடிபட்டி, அம்மன் கோவில்பட்டி, வெள்ளிமலை, முடுக்கன்காடு உள்ளிட்ட 9 கிராமங்கள் உள்ளன.இங்கு 1000-க்கும் மேற்பட்டவர்கள் 100 நாள் திட்டத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் அங்கு பணித்தள பொறுப்பாளராக பணிபுரிந்து வரும் ரதிதேவி என்பவரை கொட்டாம்பட்டி கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் செல்லப்பாண்டி அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.இந்நிலையில் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்லப்பாண்டியை பணிமாற்றம் செய்ய கோரி, ஊராட்சி மன்ற தலைவர் ஜெயசுதா உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட பெண்கள் 10-க்கும் மேற்பட்ட மினிவேனில் நேற்று கொட்டாம்பட்டி யூனியன் அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அரசு அதிகாரிகள் எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திருச்சி-மதுரை சாலை கொட்டாம்பட்டி நந்தம் பிரிவு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு வந்த மேலூர் தாசில்தார் செந்தாமரை, கொட்டாம்பட்டி இன்ஸ்பெக்டர் சாந்திபாலாஜி, யூனியன் ஆணையாளர் ஜெயபால் மற்றும் யூனியன் அலுவலர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலெக்டரிடம் பேசி சுமூக முடிவு எடுப்பதாக கூறினர். இதை தொடர்ந்து அங்கிருந்து கலைந்து சென்றவர்கள் மீண்டும் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் செல்லப்பாண்டியை பணி மாறுதல் செய்யும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்தனர். பின்னர் யூனியன் ஆணையாளர் ஜெயபால், பொட்டப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயசுதா, பணித்தள பொறுப்பாளர் ரதிதேவி மற்றும் கிராம பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக கொட்டாம்பட்டி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்