திருத்தணி அருகே பஸ்களை இயக்கக்கோரி பொதுமக்கள் சாலைமறியல்
திருத்தணி அருகே பஸ்களை இயக்கக்கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுப்பட்டனர்.;
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த ஆற்காடு குப்பம் கிராமத்தின் வழியாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை, திருப்பதி செல்லும் பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த நிலையில் தற்போது கிராமத்திற்கு வெளியே சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலை புறவழிச்சாலை ஏற்படுத்திய பின் தனியார் மற்றும் அரசு பஸ்கள் எதுவும் ஆற்காடுகுப்பம் கிராமம் வழியாக செல்லவில்லை. இதனால் பெண்கள், பள்ளி குழந்தைகள், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பலரும் தேசிய நெடுஞ்சாலைக்கு நடந்து வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று சென்னை- திருப்பதி வழியாக செல்லும் தனியார் மற்றும் அரசு பஸ்கள் ஆற்காடுகுப்பம் வழியாக இயக்க வேண்டும் என்று கோரி அந்த பகுதி மக்கள் திடீரென தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த கனகம்மாசத்திரம் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.