பணவீக்கம் 5.8 சதவீதமாக குறைந்தது; அத்தியாவசிய பொருட்களின் விலை குறையுமா?-பொதுமக்கள் கருத்து

பணவீக்கம் 5.8 சதவீதமாக குறைந்துள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்களின் விலை குறையுமா என்பது குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Update: 2022-12-18 17:27 GMT

பணவீக்கம் என்பது நாட்டில் உணவு பொருட்கள் உள்பட அத்தியாவசிய பொருட்களின் விலையைப் பொறுத்து, நுகர்வோர் குறியீட்டு எண் அடிப்படையில் மாதந்தோறும் கணக்கிடப்படுகிறது.

பண வீக்கம் குறைந்துள்ளதா? அதிகரித்துள்ளதா? என்பதை கடந்த மாதங்களுடன் ஒப்பிட்டு மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை ஒவ்வொரு மாதமும் அறிவிப்பை வெளியிட்டு வருகிறது.

பணவீக்கம் குறைந்தது

அந்த வகையில் கடந்த நவம்பர் மாதத்திற்கான, மொத்த விலைக்கான பணவீக்க நிலை குறித்து மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், 'மளிகை பொருட்கள், காய்கறிகள் ஆகியவற்றிற்கான மொத்த விலை பணவீக்கம் கடந்த 18 மாதங்களில் இல்லாத அளவுக்கு 5.85 சதவீதமாக சரிந்துள்ளது. அதேப்போன்று, சில்லரை பணவீக்கம் கடந்த 11 மாதங்களில் இல்லாத அளவுக்கு 5.88 சதவீதமாக குறைந்துள்ளது' என்று தெரிவிக்கப்பட்டது.

இதனைச் சுட்டிக்காட்டி நாடாளுமன்றத்தில் 2022-23-ம் நிதி ஆண்டுக்கான துணை மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தில் 'பணவீக்கம் மேலும் குறையும்' என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நம்பிக்கை தெரிவித்தார்.

அப்போது அவர் பேசுகையில், 'சில்லரை பணவீக்கம் கடந்த 11 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. இதனை மேலும் குறைப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். அத்தியாவசிய பொருட்கள் விலை நிலவரத்தை மத்திய அரசு தொடர்ந்து உன்னிப்பாக கவனித்து வருகிறது. குறைந்த அளவு பணவீக்கத்துடன் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக திகழ்கிறது. எனவே பொருளாதார தேக்கநிலை பற்றி அச்சம் தேவையில்லை' என்று கூறி இருந்தார்.

பணவீக்கம் குறைந்து வருவதாக சொல்லப்படுவதால், அது அத்தியாவசிய பொருட்களின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறதா? என்பது பற்றி பல்வேறு தரப்பினரின் பார்வை வருமாறு:-

பொருளாதார ஆலோசகர்

பொருளாதார ஆலோசகர் வ.நாகப்பன்:-

இந்தியாவில் பணவீக்கம் தொடர்ந்து இருந்து வருகிறது. இனியும் தொடர்ந்து இருக்கத்தான் போகிறது. பண வீக்கம் 4 முதல் 6 சதவீதம் அளவுக்குள் இருக்கும். சில நேரங்களில் இந்த அளவைத் தாண்டி இருக்கிறது. 1992-1994-ம் ஆண்டுகளின் போது பண வீக்கம் அதிகபட்சமாக 17 சதவீதம் அளவில் கூட இருந்துள்ளது.

பணவீக்கம் குறைந்தால் விலைவாசி குறைந்து விடும் என்று கருதக்கூடாது. பணவீக்கம் குறைந்தாலும் விலையேற்றம் இருக்கவே செய்யும். அதனை கட்டுப்படுத்த முடியாது. ஆனால் விலையேற்றத்தின் வேகத்தை கட்டுப்படுத்தும். உதாரணமாக ஒரு பொருள் 6 சதவீதம் உயர்வதற்கு பதிலாக 4 சதவீதம் அளவுக்கு உயர்வு இருக்கும்.

அதாவது கடந்த ஆண்டு ரூ.100-க்கு வாங்கிய ஒரு பொருள் இந்த ஆண்டு ரூ.108-க்கு விற்பனையாகி அடுத்த ஆண்டு ரூ.112 ஆக விலை அதிகரிப்பது போன்றது ஆகும்.

விலை ஏறுமுகம்

அபுதாகீர் (வியாபாரி, திண்டுக்கல்):- பணவீக்கம் 5.8 சதவீதமாக குறைந்துள்ளது என மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சகம் தெரிவித்தது. ஆனால் அரிசி, பருப்பு, பால், சர்க்கரை, நெய் உள்ளிட்ட பொதுமக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து ஏறுமுகமாவே உள்ளது. எனவே பணவீக்கம் குறைவு விலைவாசி உயர்வுக்கு முட்டுக்கட்டை போட முடியவில்லை என்பதே பெரும்பாலானவர்களின் கருத்து. சாமானிய மக்கள் வேண்டுமானால் பணவீக்கம் குறைந்தால் விலைவாசி குறையும் என நினைக்கலாம். எனவே அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்தாமல் ஆடம்பர பொருட்களுக்கான விலையை உயர்த்தினால் ஏழை மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்.

தமிழ்மணி (குடும்ப தலைவி, திண்டுக்கல்):- சமையல் கியாஸ் சிலிண்டர், பால், நெய் என அனைத்து பொருட்களின் விலையும் ஏறுமுகமாக தான் இருக்கிறது. பணவீக்கம் குறைந்துள்ளதால் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் ஆடைகளின் விலை குறைந்துவிட்டதாக சொல்கிறார்கள். ஆனால் அவற்றின் விலை முன்பைவிட தற்போது அதிகமாக தான் உள்ளது. மளிகை பொருட்கள், காய்கறிகள் என அனைத்து பொருட்களின் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் செல்கிறது. எனவே பணவீக்கம் குறைவு அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தியதாக தெரியவில்லை.

மக்களுக்கு பலன் கிடைக்காது

மூர்த்தி (கட்டிட தொழிலாளி, பழனி):- பண வீக்கம் கூடுகிறதா? குறைகிறதா? என்பது சாதாரண மக்களுக்கு தெரியாது. ஆனால் அரிசி, கோதுமை, பருப்பு எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. பண வீக்கம் தற்போது குறைந்துள்ள நிலையில் இந்த பொருட்களின் விலை சரிந்ததாக தெரியவில்லை. எனவே புள்ளி விவரங்களை மட்டும் வெளியிடுவதால் மக்களுக்கு பலன் கிடைக்காது. அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்தால் மட்டுமே சாதாரண மக்கள் பாதிக்கப்படமாட்டார்கள்.

வள்ளி (குடும்ப தலைவி, கோபால்பட்டி):- அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் 'பட்ஜெட்' போட்டு குடும்பம் நடத்தும் என்னை போன்ற இல்லத்தரசிகள் தான் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். பண வீக்கம் தற்போது 5.8 சதவீதமாக குறைந்துள்ளது. இது மேலும் குறைய வாய்ப்புள்ளது என அறிவித்துள்ளார்கள். ஆனால் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்பட்டதற்கான எந்த அறிவிப்பும் வரவில்லை. எனவே பண வீக்கம் குறைந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

பண வீக்கம் குறைவது ஒருபுறம் இருந்தாலும் பெட்ரோல்-டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் போன்ற மிகவும் அத்தியாவசிய பொருட்கள் விலை இனி உயராமல் கட்டுக்குள் வைத்துக்கொண்டாலே போதும் என்பது பொதுமக்களின் பொதுவான கோரிக்கையாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்