வெண்ணைமலை பகுதியில் வீடுகளில் கருப்பு கொடி கட்டி பொதுமக்கள் போராட்டம்

கோவிலை சுற்றியுள்ள குடியிருப்புகளை காலி செய்ய நோட்டீஸ் அனுப்பப்பட்டதால் வெண்ணைமலை பகுதியில் வீடுகளில் கருப்பு கொடி கட்டி பொதுமக்கள் போராட்டம் நடந்தது.

Update: 2022-08-25 18:32 GMT

கோவிலை சுற்றி குடியிருப்புகள்

கரூர் அருகே உள்ள வெண்ணைமலையில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலை சுற்றி சுமார் 400-க்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளின் மனைகள் அனைத்தும் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் நிர்வாகத்திற்கு சொந்தமானது எனவும், குடியிருப்புகளை காலி செய்ய வேண்டும் எனவும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது.பின்னர் இந்து சமய அறநிலையத்துறை முதற்கட்டமாக 25 குடும்பங்களுக்கு குடியிருப்புகளை காலி செய்ய வலியுறுத்தி நீதிமன்றம் மூலம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

போராட்டம்

இந்நிலையில் நேற்று முன்தினம் அப்பகுதியில் ஒலிப்பெருக்கி மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்ட 25 குடியிருப்பு வாசிகளும் உடனடியாக வீடுகளை காலி செய்ய வேண்டு என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து நேற்று வெண்ணைமலையை சுற்றியுள்ள குடியிருப்பு வாசிகள் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கடைகளில் கருப்பு கொடி கட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும், அப்பகுதியில் உள்ள 20-க்கும் மேற்ப்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன. பின்னர் கோரிக்கைகயை வலியுறுத்தி வெண்ணைமலை பஸ் நிலையத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் திரண்டனர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த கரூர் கோட்டாட்சியர் ரூபினா, கரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தேவராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் திரண்டு இருந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.இதுகுறித்து வெண்ணைமலை குடியிருப்பு வாசிகள் கூறுகையில், வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலை சுற்றி கடந்த பல ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வருகிறோம். தற்போது இந்த நிலம் கோவிலுக்கு சொந்தமான நிலம் என இந்து சமய அறநிலையத்துறை கூறி வருகிறது. எனவே இந்த நிலத்தை தங்களுக்கு உரிமையாக்கி தரவேண்டும் என தெரிவித்தனர்

Tags:    

மேலும் செய்திகள்