குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு
திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் வெங்கத்தூர் முதல்நிலை ஊராட்சிக்கு உட்பட்டது வெங்கத்தூர் பகுதி. இங்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் மணவாளநகர், ஒண்டிக்குப்பம், பட்டரை போன்ற சுற்றுவட்டார பகுதிகளில் சேரும் குப்பைகளை வெங்கத்தூர் 15-வது வார்டில் குப்பை கிடங்கு அமைத்து அதில் குப்பையை கொட்ட அதிகாரிகள் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு 5 டிராக்டர்களில் குப்பைகளை பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்புக்கு அருகில் கொட்ட வந்த போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் குப்பை கொண்டு வந்த 5 டிராக்டர்களை சிறை பிடித்து தங்கள் பகுதியில் விவசாயம் பாதிக்கப்பட்டு, நீர்நிலை பாதிக்கும் நிலை உள்ளதால் இங்கு குப்பைகளை கொட்டக்கூடாது எனவும், குப்பை கிடங்கு அமைக்க எதி்ர்ப்பு தெரிவித்தும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு பின்னர் திருப்பி அனுப்பினார்கள்.
முற்றுகை போராட்டம்
இந்த நிலையில் நேற்று வெங்கத்தூர் 15-வது வார்டு பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கள் பகுதியில் குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், வெங்கத்தூரை தனி ஊராட்சியாக அறிவிக்க வலியுறுத்தியும் மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவாயில் முன்பு பதாகைகளை கையில் ஏந்தி திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புகார் மனு
அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து வந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதை தொடர்ந்து அவர்கள் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீசை நேரில் சந்தித்து குப்பை கொட்டுவதால் தங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுவதாகவும், உடனடியாக குப்பையை கொட்டுவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், வெங்கத்தூர் 15-வது வார்டை தனி ஊராட்சியாக மாற்ற கோரியும் புகார் மனு அளித்தனர். அந்த மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் அதன் மீது விசாரணை மேற்கொண்டு தக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். அதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.