குழந்தைகளை அழைத்து சென்றஅதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்

பிச்சை எடுப்பதாக தவறாக நினைத்து குழந்தைகளை அழைத்து சென்ற அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

Update: 2023-08-28 19:20 GMT

பிச்சை எடுப்பதாக தவறாக நினைத்து குழந்தைகளை அழைத்து சென்ற அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

பிச்சை எடுப்பதாக...

திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் அருகே உள்ள நரிக்குறவர் காலனியை சேர்ந்த சிலர் தங்களது குழந்தைகளை திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் பிச்சை எடுக்க வைப்பதாக எழுந்த புகாரின் பேரில் சைல்டு லைன் அலுவலர்கள் 2 வயது குழந்தை, 7 சிறுமிகள் என 8 பேரை அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நரிக்குறவர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், தங்களது குழந்தைகள் பிச்சை எடுப்பதாக தவறாக அழைத்து சென்றுவிட்டனர். எனவே குழந்தைகளை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கூறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத்தொடர்ந்து 8 பேரின் பெற்றோர்களை குழந்தைகள் காப்பகத்திற்கு அழைத்து சென்று பார்க்க வைக்கின்றோம் என போலீசார் தெரிவித்ததை தொடர்ந்து நரிக்குறவர் மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

புத்தாடை எடுக்க...

இதுகுறித்து 2 வயது சிறுவனின் தாய் சங்கீதா கூறுகையில், நான் எனது மகனை அழைத்து கொண்டு புது துணியை எடுப்பதற்காக பஸ் நிைலயத்துக்கு சென்றோம். அங்கு வந்த போலீசார் எனது மகனை தூக்கி செல்ல முயன்றனர். அவர்களிடம் ஏனென்று கேட்டதற்கு என்னை தாக்கி கீழே தள்ளிவிட்டு எனது கையில் இருந்த மகனை தூக்கி சென்றனர். உறவினர்களின் திருமணத்திற்கு புத்தாடை எடுப்பதற்காக வந்தோம். என்னிடம் முகவரி சான்று இருக்கிறது என்று கூறியும் அவர்கள் மகனை தூக்கிச் சென்றனர் என்றார்.

மற்றொரு சிறுமியின் தாய் ஜூலி கூறுகையில்,

குழந்தைகளை பிச்சை எடுக்க வைக்கிறோம் என தவறாக நினைத்து சைல்டு லைன் அதிகாரிகள் எங்களது குழந்தைகளை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றனர்.

குழந்தைகளை பிச்சை எடுக்கும் அளவிற்கு நாங்கள் விடவில்லை. எனது மகள் படிக்கிறாள். நான் சத்திரம் பஸ் நிலையத்தில் ஊசி-பாசி விற்றால்தான் குழந்தைகளை படிக்க வைக்க முடியும். எனது குழந்தையை அழைத்து சென்ற அதிகாரிகள் இது வரை எங்கள் கண்ணில் காட்டவில்லை, என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்