விதிகளை மீறி செயல்படும் கல்குவாரிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு-உரிமையாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
கிணத்துக்கடவு அருகே பேச்சுவார்த்தையில்விதிகளை மீறி செயல்படும் கல்குவாரிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு, உரிமையாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு அருகே பேச்சுவார்த்தையில்விதிகளை மீறி செயல்படும் கல்குவாரிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு, உரிமையாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கல்குவாரிக்கு எதிர்ப்பு
கிணத்துக்கடவு அருகே உள்ள பொட்டையாண்டி புறம்பு ஊராட்சி பகுதியில் கோவை, குனியமுத்துரைசேர்ந்த ரஞ்சித்குமார் என்பவருக்கு சொந்தமான கல்குவாரி உள்ளது. இந்த கல்குவாரியில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பாறை உடைப்பதற்காக வெடிவைத்தபோது கல்குவாரியின் அருகில் உள்ள வீடு மீது கல் விழுந்தது. இதனால் அருகில் உள்ள வீடுகளில் மேற்கூரை உடைந்தது. இதனையடுத்து கல்குவாரி அருகில் குடியிருக்கும் பொதுமக்கள் பொள்ளாச்சி சப்-கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர்.
இதனையடுத்து கடந்த சில மாதமாக கல்குவாரி செயல்படாமல் இருந்தது. இந்தநிலையில் இந்த குவாரி மீண்டும் செயல்பட உள்ளதாக தகவல் பரவியதை தொடர்ந்து கடந்த 19-ம் தேதி கல்குவாரி பகுதியில் சொக்கனூர், பொட்டையாண்டி புறம்பு பகுதி பொதுமக்கள் திரண்டு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டு கல் குவாரியை நிரந்தரமாக மூட வேண்டும் என்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இந்தநிலையில் நேற்று கிணத்துக்கடவு தாலுகா அலுவலகத்தில் மாவட்ட கனிமவளத்துறை துணை இயக்குனர் சசிகுமார் தலைமையில் பொதுமக்களுக்கும், கல்குவாரி உரிமையாளருக்கும் இடையே சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது பேசிய பொதுமக்கள் கூறியதாவது:- கடந்த சில மாதத்திற்கு முன்பு கல்குவாரியில் வைக்கப்பட்ட வெடியால் பாறைகள் அருகில் உள்ள வீட்டில் விழுந்து அங்குள்ளவர்களுக்கு மரண பயத்தை ஏற்படுத்தி உள்ளது.
அதேபோல் கல்குவாரி பகுதியில் இருந்த உயர் மின்னழுத்த கம்பத்தை பட்டா நிலத்தில் நில உரிமையாளரிடம் கேட்காமல் நடுரோட்டில் நட்டி வைத்துள்ளனர். இதனால் அந்த வழியாக செல்லும் பட்டா நில உரிமையாளர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். கல்குவாரியில் அரசு விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது. ஆகவே இந்த கல்குவாரியில் நாங்கள் கல் உடைக்க அனுமதிக்க மாட்டோம்.இந்த குவாரியை தடைசெய்ய வெண்டும் என திட்டவட்டமாக தெரிவித்தனர். இதற்கு உரிமையாளர் ஆட்சபேனை தெரிவித்தார்.
வாக்குவாதம்
இதனால் பொதுமக்கள், கல்குவாரி உரிமையாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதனையடுத்து கிணத்துக்கடவு தாசில்தார் மல்லிகா பேசியதாவது:-
பிரச்சினை மேலும் ஏற்படக்கூடாது என்பதற்காக தான் சமாதான கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் இருவரும் சமாதானமாக இருக்க வேண்டும். இதிலும் வாக்குவாதம் செய்தால் எப்படி?. தற்போது கோர்ட்டில் வழக்கு உள்ளது என்பதால் கோர்ட்டு உத்தரவு வரட்டும் அதுவரை இரு தரப்பினரும் பிரச்சினை செய்யாமல் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். கூட்டத்தில் கிணத்துக்கடவு மண்டல தாசில்தார் ராமராஜ், கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், வருவாய் ஆய்வாளர் கோபிலதா, கிராம நிர்வாக அலுவலர்கள். மதுக்கண்ணன், பாண்டிப்பிச்சன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.