அரசு பஸ்சை சிறைபிடித்து காலி குடங்களுடன் பொதுமக்கள் போராட்டம்

முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து அரசு பஸ்சை சிறைபிடித்து காலி குடங்களுடன் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-02-26 21:37 GMT

வாலாஜாபாத்,

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுகா காஞ்சீபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது அவளூர் கிராம ஊராட்சி. இந்த கிராம ஊராட்சிக்கு உட்பட்ட அவளூர், கண்ணடியான்குடிசை, கணபதிபுரம் என கிராமபகுதிகளும், ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளிட்டவை செயல்பட்டு வருகிறது.

அவளூர் கிராம ஊராட்சியில் 3 ஆயிரம் பேர் வசித்து வரும் நிலையில் பாலாற்று பகுதியில் இருந்து குடிநீர் கொண்டு வரப்பட்டு, கிராமத்தில் உள்ள அனைத்து மக்களும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அவளூர் கிராமத்தில் உள்ள காமராஜர் நகர் குடியிருப்பு பகுதிக்கு கடந்த ஒரு வார காலமாக குடிநீர் முறையாக வழங்கப்படவில்லை.

போராட்டம்

அதன் காரணமாக அந்த பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் கோபமடைந்த அந்த பகுதி மக்கள் காலி குடங்களுடன் அவளூர் சாலையில் ஒன்று கூடி அரசு பஸ்சை சிறை பிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிராம மக்களின் போராட்டம் குறித்து அறிந்த ஊராட்சி மன்ற நிர்வாகத்தினர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் வழங்க முறையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதன் பேரில் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

கிராம மக்களின் சாலை மறியல் காரணமாக கீழ்பேரனமல்லூர்- அவலூர்- வாலாஜாபாத் சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்