திருவாலங்காடு அருகே ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு

திருவாலங்காடு அருகே நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் தற்காலிகமாக பணி நிறுத்தப்பட்டது.

Update: 2023-07-22 08:01 GMT

கனகம்மாசத்திரம்,

திருவாலங்காடு ஒன்றியம் லட்சுமாபுரம் கிராமத்தில் ஜல் ஜீவன் திட்டத்தில் குடிநீர் குழாய் பதிக்க கிராம நிர்வாகம் கடந்த 4 மாதத்திற்கு முன்பு பணி தொடங்கியது. அப்போது மாநில நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து சில வீடுகளின் சுற்றுச்சுவர் இருந்ததால் அந்த வழியாக குடிநீர் குழாய் அமைக்க முடியவில்லை.

இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் கங்கா சார்பில் முதல்-அமைச்சர் தனிப்பிரிவில் புகார் மனு அளிக்கப்பட்டது.

அதன் பேரில் கடந்த ஜூன் மாதம் திருத்தணி நெடுஞ்சாலை துறையினர் அந்த பகுதியை ஆய்வு செய்து வருவாய் துறையினர் மூலம் ஆக்கிரமிப்பு இடங்கள் அளக்கப்பட்டது. இதில் 8-க்கும் மேற்பட்ட வீடுகளின் சுற்றுச்சுவர் நெஞ்சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து ஆக்கிரமிப்புகள் அகற்றபட உள்ளதாக நெடுஞ்சாலை துறையினர் சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று வருவாய், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் அந்த பகுதிக்கு சென்று பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பை அகற்ற முயன்றனர்.

அப்போது அப்பகுதி மக்கள் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுட்டனர். இதையடுத்து சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கருதி ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை அதிகாரிகள் தற்காலிகமாக ஒத்திவைத்தனர்.

மேலும் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

Tags:    

மேலும் செய்திகள்