இயற்கை எரிவாயு குழாய் பதிக்க பொதுமக்கள் எதிர்ப்பு - பூமி பூஜை பாதியில் நிறுத்தம்
இயற்கை எரிவாயு குழாய் பதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பூமி பூஜை பாதியில் நிறுத்தப்பட்டது.
வீடுகளுக்கான இயற்கை எரிவாயு வினியோக திட்டத்திற்காக திருத்தணி அடுத்த அருங்குளம் பகுதியில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் கெயில் இந்திய நிறுவனத்தின் வால்வு ஸ்டேஷன் பகுதியிலிருந்து மாமண்டூர் வழியாக சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலை வரை உள்ள 3 கிலோமீட்டர் தூரத்திற்கு எரிவாயு குழாய் பதிக்கும் பணி கடந்த மாதம் தனியார் நிறுவனம் மூலம் தொடங்கப்பட்டது.
இதற்கு மாமண்டூர் கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து எரிவாயு குழாய் பதிக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து மாமண்டூர் கிராம மக்களுக்கும், எரிவாயு குழாய் பதிக்கும் தனியார் நிறுவனத்திற்கும் இடையே அமைதி பேச்சுவார்த்தை திருத்தணி ஆர்.டி.ஓ. ஹஸ்ரத்பேகம், துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சமரசம் எட்டப்பட்டு டிசம்பர் 1-ந்தேதி முதல் எரிவாயு குழாய் பதிக்கும் பணிகள் தொடங்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி நேற்று இயற்கை எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்திற்கு அருங்குளம் கிராமத்தில் பூமிபூஜை போடுவதற்கு எரிவழி குழாய் பதிக்கும் தனியார் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அருங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் சரண்யா தலைமையில் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திருத்தணி தாசில்தார் வெண்ணிலாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்த எரிவாயு திட்டம் வருவது குறித்து இதுவரை எங்கள் ஊராட்சிக்கு எந்த ஒரு தகவலும் வருவாய்த்துறையினர் தெரிவிக்கவில்லை. எங்கள் கிராமம் வழியாக இந்த திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்து அந்த பகுதியில் இருந்த எரிவாயு குழாய் குழாய்களை அப்புறப்படுத்தினர். அருங்குளம் கிராமத்தில் அசம்பாவிதங்களை தடுக்க கனகம்மாசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். எனவே எரிவாயு திட்டத்திற்கு பூமிபூஜை பாதியில் நிறுத்தப்பட்டது.