கல்குவாரியை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம்

இருக்கன்துறை அருகே கல்குவாரியை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள்.

Update: 2023-02-01 19:00 GMT

வடக்கன்குளம்:

நெல்லை மாவட்டம் இருக்கன்துறை அருகே உள்ள புத்தேரி கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறது. இந்த ஊருக்கு அருகில் சில மாதங்களுக்கு முன்பு கல்குவாரி ஒன்று அரசு அனுமதி பெற்று இயங்கி வருகிறது. அந்த கல்குவாரியில் நேற்று முன்தினம் பாறைகளை உடைக்க வெடி வைத்ததில் ஏற்பட்ட அதிர்வில் புத்தேரி கிராமத்தில் சுடலை என்பவருக்கு சொந்தமான வீட்டின் ஜன்னல் கண்ணாடி உடைந்தது. அதேபோல் இசக்கியப்பன் என்பவருக்கு சொந்தமான வீட்டின் சிமெண்டு பூச்சுகள் உடைந்து விழுந்து உள்ளது.

இதனை கண்டித்து அந்த கிராமத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் புத்தேரி அருகில் உள்ள கல்குவாரியை முற்றுகையிட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கல்குவாரியை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கஞ்சி காய்ச்சி போராட்டத்திலும் ஈடுபட்டனர். தொடர்ந்து ராதாபுரம் தாசில்தார் வள்ளிநாயகம், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, புத்தேரி கிராமம் அருகில் உள்ள 2 கல்குவாரிகளும் தற்போது செயல்படக்கூடாது என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்