சித்தாலப்பாக்கத்தில் மதுக்கடையை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம்

சித்தாலப்பாக்கத்தில் மதுக்கடையை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update:2022-10-18 15:12 IST

சென்னையை அடுத்த சித்தாலப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட ஒட்டியம்பாக்கம் பிரதான சாலை வெற்றிவேல் நகர் பகுதியில் கடந்த 4-ந்தேதி புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது.

அங்கு வரும் குடிமகன்களால் தங்களுக்கு பெரும் இடையூறாக இருப்பதாகவும், எனவே உடனடியாக மதுக்கடையை மூடக்கோரியும் அந்த பகுதியைச் சேர்ந்த திரளான பெண்கள் உள்பட 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று மாலை திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீஸ் உதவி கமிஷனர் ரியாசுதீன், பெரும்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன், ஊராட்சி மன்ற தலைவர் ரவி ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பொதுமக்கள் கூறும்போது, "இந்த பகுதியில் மதுபான கடையை திறக்க நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். அதையும் மீறி திறக்கப்பட்ட கடையை மூட வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் உள்பட அனைவருக்கும் மனு அளித்தோம். ஆனால் இதுவரை மதுக்கடையை மூடவில்லை. இந்த கடையை திறந்த பிறகு நாங்கள் பல்வேறு தொல்லைகளுக்கு ஆளாகி வருகிறோம். மதுக்கடையை மூடவில்லை என்றால் கடையை மூடும் வரை தொடர் போராட்டம் நடத்துவோம்" என்றனர்.

இதையடுத்து போலீசாரின் சமரச பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்