அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் போராட்டம்

குன்னூரில் அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.;

Update: 2023-06-14 22:30 GMT

குன்னூர்

குன்னூர் நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. இங்கு சில வார்டுகளில் மட்டும் நகராட்சி சார்பில் நிதி ஒதுக்கப்பட்டு வளர்ச்சி பணிகள் நடைபெற்றதாகவும், மீதமுள்ள வார்டுகளில் பணிகள் நடைபெறவில்லை எனவும் பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். 5-வது வார்டில் மாணிக்கம் பிள்ளை தோட்டம், 6-வது வார்டில் மேல் வண்ணாரப்பேட்டை பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி பொதுமக்கள் மேல் வண்ணாரப்பேட்டையில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது, நடைபாதை, கழிவுநீர் கால்வாய், குடிநீர், சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கடந்த 1½ ஆண்டுகளாக செய்து தரப்படவில்லை. இதனால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். இதை கருத்தில் கொண்டு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த குன்னூர் தாசில்தார் சிவக்குமார் தலைமையில் வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்