ஆடு, மாடுகளை கடிக்கும் நாய்களை கட்டுப்படுத்தக் கோரி பொதுமக்கள் மறியல்

மஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சியில் ஆடு, மாடுகளை கடிக்கும் நாய்களை கட்டுப்படுத்தக் கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2022-12-14 19:23 GMT

ஆடுகள் அடுத்தடுத்து சாவு

கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியம் மஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சியில் பொதுமக்கள் விவசாயத்துடன் அதிக அளவில் ஆடு, மாடுகளையும் வளர்த்து வருகின்றனர். இந்த ஆடு, மாடுகளை அண்மை காலமாக அப்பகுதியில் சுற்றித்திரியும் தெரு நாய்கள் கடித்து குதறி உயிர் இழப்பை ஏற்படுத்தி வருகின்றனர். அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு ராசாங்கோவிலூர் பகுதியை சேர்ந்த அருக்காணி என்பவர் வளர்த்து வந்த 6 ஆடுகளையும், கடந்த வாரம் பரமசிவம் என்பவர் வளர்த்து வந்த 4 ஆடுகளையும், நேற்று கனகராஜ் என்பவர் வளர்த்து வந்த 4 ஆடுகளையும் மேய்ச்சலுக்கு விட்டிருந்தபோது தெரு நாய்கள் கடித்து அவை உயிரிழந்தன.

நாய்கள் தொல்லை அதிகரிப்பு

மேலும் அதே பகுதி செல்லாண்டிபுரத்தில் அதிகாலை வேளையில் வீட்டிற்கு வெளியே தூங்கி கொண்டிருந்த ஆறுமுகம், செல்லமுத்து, லோகாம்பாள் ஆகிய 3 பேரையும் தெரு நாய் கடித்ததில் அவர்கள் கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று தற்போது வீட்டில் இருந்து சிகிச்சைக்கு சென்று வருகின்றனர்.

இப்படி தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து, ஆடு மாடுகளை கடித்து உயிர் இழப்பை ஏற்படுத்தியதோடு இல்லாமல் மனிதர்களையும் கடித்தது அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துகிறது. இது குறித்து பொதுமக்கள் சார்பில் ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் மனு அளிக்கப்பட்டும், எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

சாலைமறியல்

இந்த நிலையில் நேற்று கனகராஜின் 4 ஆட்டை நாய் கடித்ததால் இறந்தது அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் நேற்று மாலை கரூர்-மணப்பாறை சாலையில் நன்னிபாறை பகுதியில் ஒன்று திரண்ட விவசாயிகளும், பொதுமக்களும் இறந்த 4 ஆடுகளையும் சாலையில் போட்டு மறியலில் ஈடுபட்டனர். இதனால் சாலையின் இருபுறமும் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

போக்குவரத்து பாதிப்பு

இதுகுறித்து தகவல் அறிந்த கடவூர் தாசில்தார் ராஜாமணி, துணை தாசில்தார் சுரேஷ், ஊராட்சி மன்ற தலைவர் மாரிதங்காள், வருவாய் துறை அதிகாரிகள், மாயனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதில், நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியலால் கரூர்-மணப்பாறை சாலையில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்