அரசு பஸ்சை சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டம்

ஊசூரில் பளளி வளாகத்தில் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றக்கோரி பொதுமக்கள் பஸ்சை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-12-15 14:08 GMT

ஊசூரில் பளளி வளாகத்தில் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றக்கோரி பொதுமக்கள் பஸ்சை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குளம்போல் தேங்கிய மழைநீர்

வேலூரை அடுத்த ஊசூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் தொடர்மழை காரணமாக மழைநீர் குளம் போல தேங்கியுள்ளது. நீர் வெளியேற வழியின்றி தேங்கி சேரும் சகதியுமாக காட்சியளிக்கிறது. அதேபோல் பள்ளிக்கு அருகில் உள்ள அம்மா குளம் மற்றும் தனியார் நிலத்தில் மழைநீர் அதிகளவு தேங்கியுள்ளது. பள்ளியின் வளாகம் தாழ்வாக உள்ளதால் குளத்தில் உள்ள நீர் அவ்வப்பொழுது பள்ளி வளாகத்தில் புகுந்து குளம் போல் தேங்குகிறது.

இதனால் பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகள் சேற்றில் சிக்கி கீழே விழுந்து வகுப்பறைக்கு செல்கின்றனர். மேலும் பள்ளி வளாகம் முழுவதும் மழை நீர் தேங்கி உள்ளதால் பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ பூச்சிகளும் வகுப்பறைக்குள் வருகின்றன. மழை நின்ற பின்பும் பள்ளி வளாகத்தில் மழை நீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் ஆத்திரமடைந்தனர்.

பஸ் சிறைப்பிடிப்பு

இந்த நிலையில் சிவநாதபுரம் கிராமத்தில் இருந்து ஊசூர் நோக்கி வந்த அரசு பஸ்சை அவர்கள் சிறைப் பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வின்சென்ட் ரமேஷ்பாபு, ராஜன்பாபு, ஊராட்சி மன்ற தலைவர் விஜயகுமாரிகண்ணன், மாவட்ட கவுன்சிலர் பாபு, ஒன்றியக் குழு துணைத் தலைவர் மகேஸ்வரிகாசி, ஊராட்சி செயலாளர் பெருமாள், பாகாயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் மற்றும் அரியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பள்ளி வளாகத்தில் மழை நீர் தேங்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து பொதுமக்கள் பஸ்சை விடுவித்து போராட்டத்தை கைவிட்டனர். பள்ளி வளாகத்தில் தேங்கி இருந்த மழை நீர் பொக்லைன் எந்திரம் மூலம் தற்காலிக கால்வாய் அமைக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது. மேலும் பள்ளி வளாகத்தில் தண்ணீர் தேங்குவதை தடுக்க முரம்புமண் கொட்டப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்