விவசாயியை தாக்கியவரை கைது செய்யக்கோரி பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்

புலியூர் கண்டிகை கிராமத்தில் விவசாயி மீது தாக்குதல் நடத்தியவரை கைது செய்யக்கோரி பஸ்சை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

Update: 2022-09-19 11:45 GMT

விவசாயி மீது தாக்குதல்

திருவள்ளூர் மாவட்டம், வெங்கல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புலியூர் கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் வயது (30). விவசாயி. இவர் நேற்று தனது நிலத்தில் அறுவடை செய்த நெல்லை சாலையோரம் உலர வைத்துக் கொண்டிருந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த கோபி (30) என்ற வாலிபர் மோட்டார் சைக்கிளில் வேகமாக நெல் மீது ஏற்றியதில், தவறி கீழே விழுந்ததாக தெரிகிறது. அப்போது அங்கிருந்த ஜெயச்சந்திரனின் உறவினரும், விவசாயியுமான முரளி (50) என்பவருக்கும், கோபிக்கு ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த கோபி, முரளியை சரமாரியாக தாக்கி விட்டு மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்றதாக தெரிகிறது. இந்தத் தாக்குதல் சம்பவத்தில் முரளியின் பல் உடைந்தது.

பஸ் சிறைபிடிப்பு

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், குற்றவாளியை உடனடியாக கைது செய்யக்கோரி அந்த வழியாக வந்த 2 மாநகர அரசு பஸ்சை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்ற வெங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் தலைமையில் போலீசார் விரைந்து வந்தனர். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். குற்றவாளியை விரைவில் கைது செய்வதாக போலீசார் உறுதி அளித்ததையடுத்து, பொதுமக்கள் அமைதியாக கலைந்து சென்றனர். இதனால் நேற்று மதியம் சுமார் 1 மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்