மூடப்பட்ட கேட்டை திறக்கக்கோரி ரெயிலை மறித்து பொதுமக்கள் போராட்டம்
குளித்தலை அருகே உள்ள தெற்கு மணத்தட்டை பகுதியில் மூடப்பட்டுள்ள ரெயில்வே கேட்டை திறக்கவும், மாற்றுப்பாதையை சீரமைத்து தர கோரியும் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
போராட்டம்
குளித்தலை நகராட்சிக்கு உட்பட்ட தெற்கு மணத்தட்டை பகுதியில் உள்ள ரெயில்வே கேட் பகுதியில் குகைவழி பாதை அமைப்பதற்கான பணிகள் பல மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இதனால் இப்பகுதி மக்கள் குளித்தலை நகரப்பகுதிக்குள் வருவதற்காக மாற்றுப்பாதை அமைத்து கொடுக்கப்பட்டது. அந்த வழியாக அப்பகுதி மக்கள் குளித்தலை நகரப் பகுதிக்கு வந்து சென்று கொண்டிருந்தனர். இந்தநிலையில் நேற்று குளித்தலை- மணப்பாறை சாலையில் உள்ள ரெயில்வே கேட்டு பகுதியில் பராமரிப்பு பணிகள் ரெயில்வே ஊழியர்களால் மேற்கொள்ளப்பட்டது.
அப்போது அங்கு வந்த தெற்கு மணத்தட்டை பகுதி கிராம மக்கள் தண்டவாளத்தில் அமர்ந்து அந்த வழியாக வந்த ரெயிலை மறித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த போலீசார் தண்டவாளத்தில் அமர்ந்தவர்களை அப்புறப்படுத்தியதை அடுத்து ரெயில் புறப்பட்டு சென்றது. இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த ரெயில்வே அதிகாரிகள், குளித்தலை போலீஸ் துணை சூப்பிரண்டு ஸ்ரீதர் மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தெற்கு மணத்தட்டையில் குகை வழி பாதை அமைப்பதால் ரெயில்வே கேட் மூடப்பட்டிருக்கிறது.
ஆம்புலன்ஸ் கூட...
குகைவழிப்பாதை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளும் வரை ரெயில்வே கேட்டை வழக்கம்போல திறக்க வேண்டும். பொதுமக்கள் பயணிப்பதற்காக அமைக்கப்பட்ட மாற்றுப்பாதை கற்கள் நிறைந்த பாதையாக இருப்பதால் இதன் வழியாக வாகனங்களில் பயணிக்க முடியாத நிலை உள்ளது. இந்த காரணங்களால் தினசரி இப்பகுதியில் இருந்து பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ- மாணவிகள், வேலைக்கு செல்வோர், விவசாய தொழில்களை மேற்கொள்வோர் ஆகியோர் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
ஆபத்தான சூழ்நிலையில் இப்பகுதிக்கு ஆம்புலன்ஸ் கூட வர இயலாத நிலையில் இருக்கிறது. இப்பகுதியில் எவரேனும் உயிரிழந்தால் அவர்களை நீண்ட தொலைவிற்கு தூக்கி சென்று இடுகாட்டிற்கு கொண்டு செல்ல வேண்டிய இக்கட்டான நிலை உள்ளது. எனவே இப்பகுதியில் குகைவழிப் பாதை அமைக்கும் பணி மேற்கொள்ளும் வரை ரெயில்வே கேட்டை வழக்கம் போல திறக்க வேண்டும். மாற்றுப்பாதையை முறையாக சரி செய்து உரிய பாதை வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என்று வலியுறுத்தினர்.
பணிகள் பாதிப்பு
இதை கேட்ட ரெயில்வே அதிகாரிகள் மாற்றுப்பாதையில் தரமான சாலை வசதி செய்து தரப்படும். மேலும் ரெயில்வே கேட் திறப்பது குறித்து சேலம் கோட்டத்தில் உள்ள ரெயில்வே அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும் என்றனர். இதையடுத்து தெற்கு மணத்தட்டை பகுதியில் ரெயில்வே கேட் திறப்பது தொடர்பாக சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகளை பொதுமக்கள் சந்திப்பதாக தெரிவித்து விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதனால் இப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது. இந்த போராட்டத்தால் குளித்தலை- மணப்பாறை சாலையில் உள்ள ரெயில்வே கேட் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பராமரிப்பு பணிகள் சற்று பாதிக்கப்பட்டது.