சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மறியல்
வேலூர் வசந்தம்நகரில் கழிவுநீர் கால்வாய் அமைக்காமல் தெருக்களில் தார்சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாலை அமைக்க எதிர்ப்பு
வேலூர் கொணவட்டம் வசந்தம்நகர் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள 6 தெருக்களுக்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தார்சாலை அமைப்பதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வந்தன. இதையொட்டி அப்பகுதி மக்கள் தெருக்கள் ஓரம் கழிவுநீர் செல்வதற்கான கால்வாய் அமைக்க வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தார்சாலை அமைக்க ஜல்லிக்கற்கள் தெருவோரம் கொட்டப்பட்டன. இதனால் ஆத்திரம் அடைந்த வசந்தம்நகர் பொதுமக்கள் கழிவுநீர் கால்வாய் அமைக்காமல் சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.
சாலை மறியல்
மேலும் கருகம்புத்தூர் பகுதியில் பெங்களூரு-சென்னை சர்வீஸ் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. நீண்ட தூரத்துக்கு ஆட்டோக்கள் வரிசையாக அணிவகுத்து நின்றன.
தகவலறிந்த வேலூர் மாநகராட்சி என்ஜினீயர் ரவிச்சந்திரன், வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், மாநகராட்சி உதவி என்ஜினீயர் செல்வராஜ் மற்றும் போலீசார் அங்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் 6 தெருக்களிலும் கழிவுநீர் கால்வாய் அமைத்து தார்சாலை போடுவதாக உறுதியளிக்க வேண்டும். அதுவரை மறியலில் ஈடுபடுவோம் என்று கூறினர்.
ஆக்கிரமிப்பு
இதையடுத்து மாநகராட்சி என்ஜினீயர், கழிவுநீர் கால்வாய் விரைவில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் தெருக்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை தாங்களே அகற்றி கொள்ள வேண்டும். இல்லையென்றால் ஓரிரு நாட்களில் நோட்டீசு வழங்கி பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று கூறினார்.
இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியலால் பெங்களூரு-சென்னை சர்வீஸ் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.