குடியிருப்புகளை காலி செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்

பரங்கிப்பேட்டை அருகே குடியிருப்புகளை காலி செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

Update: 2023-08-02 19:03 GMT

புவனகிரி,

பரங்கிப்பேட்டையில் இருந்து புதுச்சத்திரம் செல்லும் சாலையில் பஞ்சங்குப்பம் கிராமம் உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இப்பகுதி மக்கள் நீர்நிலை பகுதிகளில் வசித்து வருவதாகவும், அவர்களை காலி செய்யுமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் அப்பகுதி மக்கள் தங்களுக்கு மாற்றும் இடம் கொடுத்து அதில் வீடு கட்டித்தரக்கோரி கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ளனர். இருப்பினும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதைத் தொடர்ந்து அதிகாரிகள் குடியிருப்புகளை காலி செய்யுமாறு பொதுமக்களிடம் வலியுறுத்தி வந்ததாக தொிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று மாலை பரங்கிப்பேட்டை புதுச்சத்திரம் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு ஊராட்சி மன்ற துணை தலைவர் விஜயராஜா தலைமை தாங்கினார். இதில் ஊர் நாட்டாண்மைகள் விநாயகம், செல்வநாதன், பரமசிவம், ராமர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

இருப்பினும் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகள் யாரும் வராததால் சிறிது நேரம் கோஷம் எழுப்பிய அவர்கள் தாங்களாகவே கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்