கோவில் பகுதியில் அரசு கட்டிடம் கட்ட எதிர்ப்பு
கோவில் பகுதியில் அரசு கட்டிடம் கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்;
சிங்கம்புணரி.
சிங்கம்புணரி அருகே அ.காளாப்பூர் பகுதியில் கொக்கன் கருப்பர் கோவில் உள்ளது. சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எட்டுக்கரை பங்காளிகள் கருப்பரை குலதெய்வமாக கொண்டு வணங்கி வருவதாக கூறப்படுகிறது. இந்த கோவில் இடம் அரசுக்கு சொந்தமானது எனவும், கோவிலுக்கு தேவையான குறிப்பிட்ட அளவு இடம் கொடுத்துவிட்டு மீதம் உள்ள இடங்களை நீதிமன்றம் கட்டுவதற்காக அரசு பணிகளை தொடங்கியதாகவும் தெரிகிறது. இதனை அறிந்த எட்டுக்கரை பங்காளிகள் இதுகுறித்து அமைச்சர், எம்.எல்.ஏ. மற்றும் கலெக்டரிடம் மனு கொடுத்து கோவில் பகுதியில் அரசுக்கு சொந்தமான கட்டிடங்கள் ஏதும் கட்டக்கூடாது என்று வலியுறுத்தினர்.
இந்நிலையில் நேற்று வட்டாட்சியர் சாந்தி தலைமையில் வருவாய் துறையினர் அந்த பகுதிக்கு சென்று அளவிடும் பணியை மேற்கொண்டனர். அதனை அறிந்த கொக்கன் கருப்பர் சாமியை வழிபடும் பங்காளிகள் அங்கு சென்று பணியை நிறுத்த கோரியும், கோவில் இடத்தில் அரசு கட்டிடம் கட்டக்கூடாது எனவும் கோரிக்கை வைத்தனர். மேலும், திண்டுக்கல்-காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து தடை ஏற்பட்டது. இதுகுறித்து அறிந்த சிங்கம்புணரி போலீசார், வட்டாட்சியர் சாந்தி மற்றும் வருவாய் துறையினர் அங்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.