பொது குடிநீர் குழாய் இணைப்பு துண்டிப்பு; கம்பம் ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

கம்பம் அருகே பொது குடிநீர் குழாய் இணைப்பு துண்டித்ததால் காலிக்குடங்களுடன் ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2022-09-03 15:07 GMT

கம்பம் அருகே குள்ளப்பகவுண்டன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வடக்கு இந்திரா காலனியில் பொது குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டிருந்தது. அதில் வரும் குடிநீரை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்தநிலையில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஜல்ஜீவன் திட்டத்தின்கீழ் அனைத்து வீடுகளிலும் குடிநீர் குழாய் பெற வேண்டும் என அறிவிப்பு செய்திருந்தது. ஆனால் அப்பகுதி மக்கள் குடிநீர் குழாய் இணைப்பு பெற ஆர்வம் செலுத்தவில்லை. இதையடுத்து அப்பகுதியில் உள்ள பொது குடிநீர் குழாய்களை ஊராட்சி நிர்வாகம் துண்டித்ததாக கூறப்படுகிறது.

இதனை கண்டித்து ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் அதியர்மணி தலைமையில் அப்பகுதி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் இன்று கம்பம் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது தற்காலிகமாக பொது குழாய்கள் மூலம் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் பொதுமக்கள் ஜல்ஜீவன் திட்டத்தில் குடிநீர் இணைப்பு பெற வேண்டும் என்றார். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்