குடிநீர் வினியோகம் தடைபட்டதை கண்டித்து காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல்

குடிநீர் வினியோகம் தடைபட்டதை கண்டித்து காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.;

Update:2023-03-08 00:46 IST

குடிநீர் தேவையை...

பெரம்பலூரை அடுத்த கவுல்பாளையம் பகுதியில் பெரம்பலூர்-அரியலூர்-மானாமதுரை தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு கழகத்தின் (குடிசை மாற்று வாரியம்) குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் சுமார் 500 பேர் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்பின் குடிநீர் தேவைக்காக 6 ஆழ்துளை கிணறுகள் தோண்டப்பட்டன. பின்னர் அவற்றில் சில வறண்டுவிட்டன. மீதமுள்ள ஆழ்துளை கிணறுகளில் ஒரே ஒரு ஆழ்துளை கிணற்றில் இருந்து மட்டும் மொத்த குடியிருப்பிற்கும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்த குடியிருப்பின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்திட போதிய அளவு நிதி ஒதுக்கீடு செய்து, திறந்தவெளி கிணறுகள் தோண்டிட நடவடிக்கை எடுக்குமாறு கவுல்பாளையம் ஊராட்சி மன்றத்தின் மூலம் ஓரிரு மாதத்திற்கு முன்பு தீர்மானம் நிறைவேற்றி, திருச்சியில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு கழகத்தின் உயர் அதிகாரிக்கு அனுப்பி உள்ளனர்.

மறியல்

ஆனால் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறியும், ஆழ்துளை கிணற்றின் மின் மோட்டார் பழுதடைந்ததால் கடந்த 3 நாட்களாக குடிநீர் வினியோகம் தடைபட்டதை கண்டித்தும், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நேற்று காலை பெரம்பலூர்-அரியலூர் பிரதான சாலையில் காலிக்குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் அந்த வழியாக வந்த வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.

இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு பழனிசாமி, தாசில்தார் கிருஷ்ணகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார், கவுல்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தடையின்றி குடிநீர் வினியோகம் செய்வதற்கு மாற்று ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தனர். அதன்பேரில் மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்