காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல்
காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
குடிநீர் தட்டுப்பாடு
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள இருகையூர் ஊராட்சியை சேர்ந்த கோட்டியால் ரோட்டு தெரு பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனை கண்டித்து அப்பகுதி மக்கள் நேற்று காலை திடீரென காலிக்குடங்களுடன் கோட்டியால் செக்கடி பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.அப்போது, செக்கடி பகுதியில் குடிநீர் வினியோகிக்க பதிக்கப்பட்டுள்ள குழாயில் தண்ணீர் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் திறந்து விடப்படும்போது கசிவு ஏற்பட்டுள்ள பகுதியில் இருந்து தண்ணீர் அதிக அளவில் வெளியேறுவதாக அப்போது மக்கள் தெரிவித்தனர். இதன் காரணமாக கடந்த ஒரு வாரமாக அப்பகுதி மக்கள் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு சிரமப்பட்டு வந்துள்ளனர்.
பஸ்களை தடுத்து நிறுத்தினர்
நீர்க்கசிவை உடனடியாக சரி செய்து குடிநீர் வினியோகம் செய்யாத ஊராட்சி மன்ற நிர்வாகத்தை கண்டித்து காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர். மேலும் அப்பகுதி வழியாக தா.பழூரில் இருந்து சுத்தமல்லி நோக்கி சென்ற டவுன் பஸ்சை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அங்கு வந்த தா.பழூர்- இருகையூர்-சுத்தமல்லி மார்க்கத்தில் செல்லும் பஸ்சும் மறியலில் ஈடுபட்டவர்களால் தடுத்து நிறுத்தப்பட்டது.
இதனால் பள்ளி செல்லும் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தா.பழூர் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் தலைமையிலான போலீசார், பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும் தா.பழூர் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
போக்குவரத்து பாதிப்பு
அப்போது அப்பகுதியில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணப்படும் என்று அவர் உறுதி அளித்தார். அதன்பேரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.