கஞ்சா போதையில் தகராறில் ஈடுபடுபவர்களை கைது செய்யக்கோரி பொதுமக்கள் மறியல்

கஞ்சா போதையில் தகராறில் ஈடுபடுபவர்களை கைது செய்யக்கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2023-07-27 19:52 GMT

துறையூர்:

மறியல்

துறையூர் அருகே உள்ள கீரம்பூர் கிராமத்தில் கடந்த சில நாட்களாக கஞ்சா போதையில் சில வாலிபர்கள் சாலையில் செல்பவர்களிடம் தகராறில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் பெண்கள் மற்றும் பொதுமக்களிடம் அவர்கள் தகாத முறையில் நடந்து கொள்வதாகவும், இதுகுறித்து பலமுறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதையடுத்து கீரம்பூர் கிராமத்தில் கஞ்சா விற்பனையை தடுக்கக்கோரியும், கஞ்சா போதையில் தகராறில் ஈடுபடும் வாலிபர்களை உடனடியாக கைது செய்யக்கோரியும் கீரம்பூர் கிராம மக்கள் அப்பகுதியில் மறியலில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

இது குறித்து அப்பகுதி பெண்கள் கூறுகையில், வீட்டில் இருந்து பொருட்கள் வாங்க கடைக்கு செல்லும்போது கஞ்சா போதையில் வாலிபர்கள் தகாத வார்த்தைகளில் பேசி, வம்பு செய்கின்றனர். இதனால் இளம்பெண்கள் வீட்டில் இருந்து வெளியே வர முடியாத சூழ்நிலை நிலவி வருகிறது, என்றனர்.

மறியலால் மாலை 5 முதல் இரவு 7 மணி வரை என சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக துறையூரில் இருந்து பச்சைமலை செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நடவடிக்கை எடுக்கப்படும்

இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் துறையூர் தாசில்தார் வனஜா பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, அது குறித்து சட்ட ரீதியாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார். அதன்பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்