அரசு பஸ்களை சிறை பிடித்து பொதுமக்கள் மறியல்

வாணியம்பாடி அருகே வீட்டு மனை பட்டா வழங்கக் கோரி அரசு பஸ்களை சிறை பிடித்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-08-29 17:04 GMT

வாணியம்பாடி அருகே வீட்டு மனை பட்டா வழங்கக் கோரி அரசு பஸ்களை சிறை பிடித்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வீட்டுமனை பட்டா

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே உள்ள சிக்கனாகுப்பம் ஊராட்சிக்குட்பட்ட கனகாமேடு பகுதியில் 40-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 60 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த பல ஆண்டுகளாக வீட்டு மனை பட்டா வழங்கக் கோரி வருவாய்த் துறையினரிடம் கோரிக்கை மனுக்களை அளித்துள்ளனர். ஆனால் இதுவரை அவர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கவில்லை.

இந்த நிலையில் நகரப்பகுதியில் நீர் நிலை ஆக்கிரமிப்பு செய்து வாழ்ந்து வந்த திருநங்கை உள்பட 40-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு கனகாமேடு பகுதியில் வீட்டுமனை பட்டா வழங்க வருவாய்த்துறையினர் முயற்சி செய்து வந்துள்ளனர்.

சாலை மறியல்

இதனை அறிந்த அப்பகுதி மக்கள் வெளி ஆட்களுக்கு இங்கே பட்டா வழங்கக்கூடாது. நாங்கள் 60 ஆண்டு காலமாக இப்பகுதியில் வாழ்ந்து வருகிறோம். எங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று கூறி அரசு பஸ்களை சிறை பிடித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்ததும் வாணியம்பாடி தாசில்தார் சம்பத் தலைமையிலான வருவாய்த் துறையினர் மற்றும் அம்பலூர் போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதைத்தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தில் வாணியம்பாடி- திம்மாம்பேட்டை சாலையில் 3 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்