இறந்தவர் உடலை எடுக்க மறுத்து பொதுமக்கள் மறியல்

மஞ்சூர் அருகே மயானத்துக்கு செல்ல நடைபாதை வசதி கோரி, இறந்தவர் உடலை எடுக்க மறுத்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2022-09-13 15:50 GMT

ஊட்டி, 

மஞ்சூர் அருகே மயானத்துக்கு செல்ல நடைபாதை வசதி கோரி, இறந்தவர் உடலை எடுக்க மறுத்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மயானத்துக்கு செல்ல நடைபாதை

மஞ்சூர் அடுத்த பெங்கால்மட்டம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அங்குள்ள மயான பகுதியில் அரசுக்கு சொந்தமான இடம் சிலருக்கு வழங்கப்பட்டது. இதில் அப்பகுதியை சேர்ந்த 10 குடும்பத்தினர் வீடு கட்டி உள்ளனர். இந்தநிலையில் அந்த குடும்பங்களை சேர்ந்தவர்கள் அருகே இருந்த இடம் வழியாக சென்று வந்தனர்.

இதற்கிடையே அந்த இடத்தை தனிநபர் வாங்கி வீடு கட்டி விட்டார். இதனால் மயான பகுதியில் வீடு கட்டியவர்களுக்கு செல்ல வழித்தடம் இல்லை. இதனால், தங்களுக்கு வழித்தடம் ஒதுக்கி நடைபாதை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கடந்த பல ஆண்டுகளாக பொதுமக்கள் அதிகாரிகளிடம் வலியுறுத்தி வந்தனர். இந்தநிலையில் நேற்று வயது மூப்பின் காரணமாக மனோகர் என்ற சம்பத் இறந்தார்.

சாலை மறியல்

அவரது உடலை மயானத்திற்கு எடுத்து செல்ல வழியில்லாத நிலையில், உடலை எடுக்க மறுத்தும், நடைபாதை வசதி கோரியும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஊட்டி-மஞ்சூர் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். சாலையில் அமர்ந்து வழித்தடம் ஒதுக்கி நடைபாதை வசதி ஏற்படுத்த வேண்டும், இறந்தவர் உடலை கொண்டு செல்ல வழியில்லை. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியலுக்கு ஆதரவு தெரிவித்து, அங்கு கடைகளும் அடைக்கப்பட்டன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த குந்தா தாசில்தார் இந்திரா, போலீஸ் துணை சூப்பரண்டு விஜயலட்சுமி, குந்தா வருவாய் ஆய்வாளர் மணிமேகலை, மஞ்சூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார், கிராம நிர்வாக அலுவலர் மோகனப்பிரியா ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமரசம் ஏற்பட்டதால், தேயிலை தோட்டம் வழியாக மயானத்திற்கு சென்று இறந்தவர் உடலை அடக்கம் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்