ஒலியமங்கலம்-சுந்தம்பட்டி சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் மறியல்
காரையூர் அருகே ஒலியமங்கலம்-சுந்தம்பட்டி சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சாலை மறியல்
காரையூர் அருகே ஒலியமங்கலத்திலிருந்து சுந்தம்பட்டி ெசல்லும் சாலை மிகவும் சேதமடைந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற முறையில் உள்ளது. இச்சாலையை சீரமைக்க வலியுறுத்தி சுந்தம்பட்டி கிராம மக்கள் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் சாலையை உடனடியாக சீரமைக்க வலியுறுத்தி ஒலியமங்கலம் கடைவீதியில் சுந்தம்பட்டி கிராமமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பொன்னமராவதி தாசில்தார் பிரகாஷ், அன்னவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் கருணாகரன், வீரையன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
போக்குவரத்து பாதிப்பு
பின்னர் மறியலில் ஈடுபட்ட கிராமமக்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த சாலை மறியல் போராட்டத்தால் ஒலியமங்கலம் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.